நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம் பெண்கள் குறிவைக்கப்படுகிறார்களா? என்ற அச்சமும் - கேள்வியும் எழுந்துள்ளது.

நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. கடந்த வருடம், நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள தங்களது பெண் பிள்ளைகளை மீட்டுத் தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர். தற்போது, அதுபோன்ற மேலும் ஒரு குற்றச்சாட்டு, நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து புதிதாக எழுந்துள்ளது.

அதன்படி, பெங்களூரைச் சேர்ந்த பெற்றோர், நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்களது 2 பெண் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என்று, குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த புகார் மனுவில், கடந்த 2013 ஆம் ஆண்டு, பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்களது 4 பெண் குழந்தைகளைச் சேர்த்ததாகவும், ஆனால், அடுத்த சில மாதங்களில், தங்களின் அனுமதியில்லாமல் 4 பெண் குழந்தைகளையும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டு, அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்து, அங்குச் சென்றபோது, அங்குள்ள காவலர்கள் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும், ஆனாலும், அங்குள்ள காவலர்களிடம் போராடி தங்களுடைய 2 பெண் பிள்ளைகளை எப்படியோ மீட்டு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மற்ற 2 பெண் குழந்தைகளை எவ்வளவு போராடியும் தங்களால் மீட்க முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள தங்களின் 2 பெண் பிள்ளைகளை எப்படியாவது மீட்டுத்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, நித்தியானந்தா ஆசிரமம் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில், நித்தியானந்தா ஆசிரமத்தில் பணியாற்றிய இரு பெண் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.