அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் நடிகர் பிரபுதேவா நடித்துவரும் சார்லி சாப்ளின் 2 படத்தை இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்குகிறார். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான படம் சார்லி சாப்ளின். காமெடிப் படமான இதில், பிரபு, லிவிங்ஸ்டன், காயத்ரி ரகுராம், அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசின் மாநில சிறப்புப் பரிசைப் பெற்றார் பிரபு. சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 6 இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் படம் என்ற பெருமை இந்தப் படத்துக்கு உண்டு.

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது. சக்தி சிதம்பரம் இயக்க, பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ரானி, அதா ஷர்மா இருவரும் நடிக்கின்றனர். முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக இருக்கிறது. கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதில் என்ன ஸ்வாரஸ்யம் என்னவென்றால், இப்பாடல் வரிகளை பிரபுதேவாவே எழுதியுள்ளார் என்பது தான். சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் மாரி 2 படத்திற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல். இதுபோன்ற விஷயங்கள் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானதாகும்.