இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான படம் ஆடை. படத்தின் துவக்கத்திலேயே இல்லஸ்ட்ரேஷன் எனப்படும் காமிக்கல் ஸ்டைல் வரைப்படத்தில், திருவாங்கூரில் வாழ்ந்த நங்கேலியின் வரலாற்று கதையை (ஆடை சுதந்திரம் நிறைந்த கதையை) தெரிவித்த விதம் பிரமாதம். பிறகு கதைக்குள் நுழைகின்றனர். 

Aadai Tamil Review By Galatta

சுதந்திரமாய் சுற்றித்திரியும் சுதந்திர கொடியாக... இல்லை இல்லை... காமினியாக மீடியா வேலை பார்க்கும் பெண்மணியாக நடித்திருக்கிறார் மன்னிக்கவும் வாழ்ந்திருக்கிறார் நடிகை அமலா பால். டாக் மீடியாவில் பிராங்க் ஷோ நடத்தும் அமலா பால் நண்பர்களுடன் சேர்ந்தடிக்கும் லூட்டியிலே முதல் பாதி நகர்கிறது. விளையாட்டு வினையாகும் என்பார்கள், அதுபோல் நண்பர்களுடன் சேர்ந்து கட்டும் பெட்டிங்கில் ஈடுபடுகிறார் அமலா பால். பிறகு அவர் சந்திக்கும் சோதனைகள் பற்றியும், அதிலிருந்து தன்னை எப்படி காப்பற்றிக்கொள்கிறார் என்பதில் மீதி கதையும் நகர்கிறது. ஆல் பாதி ஆடை பாதி என்பார்கள். இந்த இரு பாதி தான் ஆடை படத்தின் கதைச்சுருக்கம்.

துணை நடிகர்கள் ரம்யா, விவேக், சரித்திரன், ஸ்ரீ ரஞ்சனி போன்ற நடிகர்கள் இக்கதைக்கு மிகவும் துணையாக இருந்தனர். விவேக்கின் ஒன்-லைனரும், சம்பவம் நிறைந்த சரித்திரனின் இயல்பான நடிப்பும் நன்றாக வேலை செய்தது. ஐந்து வருடம் ஒரே கம்பெனியில் பணிபுரியும் நண்பர்களின் லூட்டி இடைவெளி வரை உள்ளது. கெட்ட வார்த்தைக்கும் அடல்ட் காமெடிக்கும் வித்தியாசம் தெரிந்து வசனம் எழுதியுள்ளார் இயக்குனர். ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா எனும் பக்தி பாடல் போல் மங்களகரமாக இருந்தது நடிகை ஸ்ரீரஞ்சனியின் நடிப்பு. அமலா பாலுக்கு அம்மாவாக கச்சிதமாக பொருந்தியிருந்தார்.

Aadai Tamil Review By Galatta

படத்தின் கேமரா பணிகள் பிரமாதம். ஆடையில்லாத தனி நபரை காண்பித்த விதம் தரம். மஷ்ரூம் எஃபக்டை கண்முன் கொண்டு வந்த நிறுத்திய எடிட்டரின் கைப்பக்குவம் சபாஷ். கதைக்கு தேவையானவாறு அமைந்துள்ளது. பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பாடல்கள் சற்று மந்தமாகவே இருந்தது. பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இது பிரதீப்குமாரின் தவறா அல்லது ரத்னா சரியாக அவுட் வாங்கவில்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Aadai Tamil Review By Galatta

இளைஞர்களின் மனம் கவரும் முதல் பாதி போன பிறகு அம்சமான கருத்தை இரண்டாம் பாதியில் வைத்து கருத்தூசி போடும் மருத்துவராக திகழ்ந்துள்ளார் இயக்குனர். பிராங் ஷோக்களால் ஏற்படும் விளைவுகள், பிறரை எப்படி பாதிக்கிறது என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். சமூக ஊடகங்களை இளைஞர்கள் எப்படி கையாளவேண்டும் இதுபோன்ற சீரான கன்டென்ட்டை ஸ்கிரிப்ட்டில் செலுத்தியிருக்கிறார். காட்சிகளில் சில ட்விட்ஸ்ட்டுகள் இருந்தாலும், பழிவாங்கும் காட்சிகள் சற்று சுற்றி வளைத்தது போல் இருந்தது.

Aadai Tamil Review By Galatta

மொத்தத்தில் ஆண் பெண் சமத்துவம், சுய உரிமை, எது அத்துமீறல் என்பதை தைத்து வைத்திருக்கிறது இந்த ஆடை. இந்த ஆடையில் சில கிழிஞ்சல்கள் இருந்தாலும், இக்கால சினிமாவிற்கு இது புத்தாடை என்று தான் கூறவேண்டும்.

Aadai Tamil Review By Galatta

இப்படம் மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் எடுத்தது அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறோம். தனது இரு படங்களிலும் ரத்தின கற்கள் போல் ஜொலிக்கும் ரத்னகுமாரின் திரைப்பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

கலாட்டா ரேட்டிங் - 2.75/5