விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மல்லூர் அருகேயுள்ள நாழிக்கல்பட்டி காந்திநகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் திலீப்குமார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதேபோல், அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான திருநாவுக்கரசு, வேலைக்கு செல்லாமால் 4,5 பேருடன் சேர்ந்து ரவுடியைப் போல் நடந்துகொள்வதாகக் கூறப்படுகிறது.

திருநாவுக்கரசும், திலீப்குமாரும் கடந்த ஆண்டு வரை நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துள்ளனர்.

தற்போது, விநாயகர் சதுர்த்தியையொட்டி திலீப்குமார் தலைமையில், அவரது பகுதியில் தனியாக ஒரு விநாயகர் சிலை வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிலையைக் கரைக்க, கடந்த 4 ஆம் தேதி பிற்பகல் மேட்டூருக்குச் சென்றுள்ளனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், திலீப்குமார் அவரது நண்பர் சரணுடன் சேர்ந்து, பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகியோர் சமாதானம் பேசுவதாகக் கூறிவிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குச் சென்றதும், திருநாவுக்கரசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திலீப்குமாரை சரமாரியாகத் தாக்கி உள்ளார். இதிலிருந்து திலீப்குமார் தப்பித்து ஓட முயன்றபோது திருநாவுக்கரசும், சரவணனும் ஓட ஓட விரட்டி கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்த நிலையில், சரணையும் கத்தியால் தாக்கிவிட்டு, அவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து சரண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தின் ஓடி வந்து, இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே திலீப்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சரணுக்குத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய திருநாவுக்கரசையும், சரவணனையும் தற்போது கைது செய்தனர்.

இதனிடையே, விநாயகர் சிலை வைப்பதில் மோதல் ஏற்பட்டு, கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.