இளம் பெண்ணின் உயிரைக் காவு வாங்கக் காரணமான பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் 22 வயதான இளம் பெண் சுபஸ்ரீ, கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பணியை முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து அவர் பள்ளிக்கரணை வழியாக வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

Subashree killed

அப்போது, பள்ளிக்கரணையில் திருமண வரவேற்புக்காக சாலையின் நடவே வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர், இளம்பெண் சுபஸ்ரீ மீது திடீரென விழுந்துள்ளது. இதில், நிலை தடுமாறி அவர் சரிந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியுள்ளது. இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

Subashree killed

மாணவி உயிரிழந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டன. பின்னர், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மனோஜ் கைது செய்யப்பட்டார்.

Subashree killed

சுபஸ்ரீயின் மரணத்துக்குக் காரணமான பேனர் அச்சடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், இளம்பெண் உயிரிழப்புக்குக் காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, இளம் பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.