வீரர்கள் விளையாடவில்லை என்றால் மனைவியை ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் என்று விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில் இந்தியப் பொருளாதார மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, “நான் சிறுவயதில் டென்னிஸ் விளையாடுகையில், வெயிலில் விளையாடினால், கருத்து விடுவேன்” என்றும், “அதனால், என்னை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்” என்று எனது உறவினர்கள் என்னைப் பயமுறுத்தினார்கள் என்று குறிப்பிட்டார். 

Sania Mirza

“ஆனால், அவற்றையெல்லாம் நான் பொருட்படுத்தாமல், விளையாடுவதில் மட்டுமே ஆர்வம் காட்டியதாகவும், அதனால் மட்டுமே தான் இந்த அளவுக்கு வந்துள்ளதாகவும்” கூறினார். மேலும், “விளையாட்டுத்துறையில் ஆர்வமுடன் இருக்கும் பெண்களை நாம் தான் உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு புதிய களம் அமைத்துத் தரவேண்டு” என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், “இந்திய விளையாட்டு வீரர்கள் வெளிநாடு சென்று விளையாடும்போது, அவர்களுடன் அவர்களது மனைவியோ, காதலியோ உடன் அழைத்துச் செல்ல அனுமதியில்லை என்றும், அப்படி அழைத்துச் சென்றால், விளையாட்டு வீரர்களின் கவனம் சிதறிவிடும் என்று கூறுவது வேதனையாக இருப்பதாக” தெரிவித்தார். “அப்படியானால், பெண்கள் தான் வீரர்களின் கவனத்தைச் சிதறடிக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்?

Sania Mirza

“வீரர்களின் ஊக்கமாக அவர்கள் வீட்டுப் பெண்களைப் பார்க்காமல், ஏன் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்” என்றும் அவர் கவலைத் தெரிவித்தார். குறிப்பாக, “வீரர்கள் சரியாக விளையாடாதபோது, அவர்களது மனைவியைக் காதலியை விமர்சிப்பது தவறானது என்றும், விராத் கோலி சரியாக விளையாடாத சூழலில், அவரது மனைவி அனுஷ்காவைப் பற்றி விமர்சிப்பது முட்டாள் தனமானது” என்றும் சானியா மிர்சா வருத்தம் தெரிவித்தார்.