ஒரு சில படங்களே, பார்வையாளனை திரைக்குள் இழுத்துப் போடும் வல்லமை கொண்ட படமாக இருக்கும். ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா மற்றும் தல அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்...இல்லை இல்லை பாடம் நேர்கொண்ட பார்வை. 

மீரா, ஃபாமி, ஆண்ட்ரியா எனும் மூன்று பெண்கள் தங்களது நண்பர்களுடன் ஒருநாள் இரவு உணவருந்த ரெசார்ட்டிற்கு செல்கிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு சம்பவம், அதன் தொடர்ச்சியாக இப்பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள்… சட்டமும், காவல்துறையும் சேர்ந்துகொண்டு இப்பெண்களை காயப்படுத்துகிறது. அதிலிருந்து எவ்வாறு வெளி வருகிறார்கள், யார் காப்பாற்றுகிறார்கள், பிறகு என்னென்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதைச்சுருக்கம்.

இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரங்கராஜ் பாண்டே கலாட்டா பேட்டியில் பேசுகையில், எனக்கு இயக்குனர் மீது அபிமானம் உண்டு. அவருடைய நட்பு நீடிக்க வேண்டும் என்ற அபிமானம். அவருடைய பார்வை நம்மை வியக்கவைக்கிறது. மிகவும் கெட்டிக்காரர். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் ரிஸ்க் அதிகம். படத்திற்குள் பாடத்தை செலுத்தும் இயக்குனர். அதே போல் தான் அஜித்தும்.

ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா என்னை ஊக்கப்படுத்துவார். நான் இரண்டு டேக் போனாலும், இரண்டென்ன முப்பது டேக் கூட போகலாம் என்று கூறுவார். எங்களுக்கு தேவை ரங்கராஜ் பாண்டே, பிங்க் படத்தில் வருவது போல் நடிக்க வேண்டாம். ரங்கராஜ் பாண்டேவாக நடித்தால் மட்டுமே போதும் என்றார். பசு மாட்டில் பால் கறப்பது போல் எளிதாக செய்தார் இயக்குனர் என்று வினோத்தை பாராட்டி பேசியுள்ளார். அஜித் பார்த்தோ அல்லது கேமரா பார்த்தோ எந்த பயமும் இல்லை. நான் சரியாக நடிக்காமல் இருந்தால், படம் தான் பாதிக்கப்படும். ஆகையால் அந்த பொறுப்பை உணர்ந்து நடித்தாராம்.