தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது, பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரித்து வருகிறது.

Rajini

தற்போது வரை 14 கட்ட விசாரணையை முடித்துள்ள நிலையில், 379 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன. அதன்படி, 555 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு, 3வது முறையாக அவகாசத்தைத் தமிழக அரசு நீட்டித்துள்ளது.

இந்த 6 மாத காலத்தில், அமைப்புகள் மற்றும் ரிட் மனுத் தாக்கல் செய்தவர்களிடம் ஆணையம் விசாரிக்க உள்ளது. குறிப்பாக, துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, ஆறுதல் கூற சென்ற நடிகர் ரஜினிகாந்த், சமூக விரோதிகள் தூத்துக்குடியில் ஊடுருவி இருப்பதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, அந்த சமூக விரோதிகள் யார் என்பது தனக்குத் தெரியும் என்று ஆவேசமாகப் பேசி, ஒரு நபர் விசாரணையில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.

Rajini

இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க 3வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல், தேவை ஏற்பட்டால், நடிகர் ரஜினிகாந்த்துக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.