குற்றப்பத்திரிகையைப் பார்க்கும் வரை முகமது ஷமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷாமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் கடந்த 2018 ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

Mohammed Shami

அந்த புகாரில், முகமது ஷாமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்ந்து இருப்பதாகவும், அவர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டார் என்றும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், அவரது சகோதரர் ஹசித் அகமது, தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும், கொலை செய்ய முயன்றார் என்றும் புகார் அளித்தார்.

இந்த புகாரின்படி, பிசிசிஐ நடத்திய விசாரணையில், ஷமி எந்த குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்தபின், அவர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஆஜராகாததையடுத்து, இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Mohammed Shami

மேலும், ஷமியின் சகோதரர் ஊரில் இருப்பதால் அவரை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதது. ஷமி மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்து, அதற்குள் அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Mohammed Shami

இதனிடையே, குற்றப்பத்திரிகையைப் பார்க்கும் வரை முகமது ஷமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன், இதுகுறித்து ஷமியின் வழக்கறிஞரிடம் முழுமையான விவரங்களைக் கேட்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு முகமது ஷமியைத் தேர்வு செய்யலாமா என்பது, குற்றப்பத்திரிகையைப் பார்த்தபிறகே முடிவு செய்யப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.