காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் இளம் பெண் மீது மாணவர் ஒருவர் தாக்குதல் நடத்தி உள்ளார்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முரிக்காசேரியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் ஆண்கள் - பெண்கள் என இருபாலரும் பயின்று வருகின்றனர். 

attacks girl

இந்த கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்த ஜித்து ஜான், தன் கூட படிக்கும் இளம் பெண் ஒருவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார். நாளடைவில் ஜித்து ஜான், தன் தோழியை ஒரு தலையாகக் காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து, தன்னுடைய காதல் குறித்து, அந்த இளம் பெண்ணிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு, அவர் மறுப்புத் தெரிவிக்கவே, தொடர்ந்து தன் தோழியைக் காதலிக்கும் படி அவர் வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், காதல் தொல்லையால், அந்த இளைஞனுடன் அந்த பெண் பேசுவதையே நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது.

தோழியாகப் பழகி வந்தவள், தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால், அந்த பெண்ணை பழிவாங்க நினைத்த  ஜித்து ஜான், கடந்த 18 ஆம் தேதி வகுப்பறைக்குள் நுழைந்து, அங்குள்ள சக மாணவர்களை வெளியேற்றி உள்ளார். இதனையடுத்து, வகுப்பறைக்குள் மாணவிகள் மட்டும் இருந்துள்ளனர். அப்போது, ஜித்து ஜானின் நண்பர் ஒருவர், வகுப்பறையில் உள்ள கதவையும், ஜன்னல்களையும் பூட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தன் தோழி என்றும் பாராமல், அந்த பெண்ணை ஜித்து ஜான், கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், மயக்கமடைந்து கீழே சரிந்து விழுந்த அந்த பெண்ணை, பூட்ஸ் காலால் எட்டி உதைத்து துன்புறுத்தி உள்ளார். இதனால், பயந்துபோன சக மாணவிகள், கத்தி கூச்சலிடவே, கல்லூரி ஊழியர்கள் சிலர் ஓடிவந்துள்ளனர். இதைப் பார்த்த ஜித்து ஜான், அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார்.

இதனையடுத்து, படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, அந்த மாணவிக்குத் தாடையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், தலை மற்றும் காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கல்லூரி வகுப்பறையிலேயே மாணவி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மாணவரைத் தேடி வருகின்றனர். மேலும், மாணவியைத் தாக்கிய ஜித்து ஜானை, கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.