கத்தி, அரிவாளால் ரவுடிகள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

கோவை சிவானந்தபுரத்தைச் சேர்ந்த ரவுடிகள் 6 பேர், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நேற்று இரவு 12 மணிக்குப் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில், பொதுவெளியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரவுடிகள் 6 பேரும், கையில் கத்தி மற்றும் அரிவாளுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அந்த புகைப்படங்களை, அவர்களே சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். தற்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சர்ச்சைக்குரிய புகைப்படத்தில் உள்ள 6 பேர் மீதும், பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பொது இடத்தில் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகப் பயங்கர ஆயுதங்களுடன், ரவுடிகள் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடும் கலாச்சாரம் தற்போது அதிகரித்துள்ளது. சேலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அரிவாளால் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், கடந்த ஆண்டு பிரபல ரவுடி பீனு, 40 ரவுடிகள் புடை சூழ கத்தி மற்றும் அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனையடுத்து, அடுத்த சில நாட்களில் போலீசார் தனிப்படை அமைத்து, அந்த ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ரவுடிகள் மீண்டும் கத்தி, அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்வுகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.