“ 'உடலுறவு வேண்டாம்' என்று சொல்ல, ஏழை நாடுகளில் உள்ள பெண்களுக்கு உரிமை இல்லை” என்று, அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு, உலக நாடுகளிலிருந்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கின்றன.

அந்த வகையில், ஏழை நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில், “இப்போது உடலுறவு வேண்டாம்” என்று சொல்ல பெண்களுக்கு உரிமை இல்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது குறித்து ஐ.நா மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளில் கால்வாசியும், ஆப்பிரிக்காவில் பாதிக்கும் மேலான தரவுகளை மட்டுமே இது உள்ளடக்கி உள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளது. 

“ 'எனது உடல் எனக்கு சொந்தமானது' என்கிற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், உலகில் உள்ள 57 நாடுகளில் 55 சதவீத பெண்கள் மட்டுமே உடலுறவில் ஈடுபடுவது, கருத்தடை பயன்படுத்துவது, எப்போது பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகள் போன்ற சுகாதார சேவையை நாட வேண்டும் என்பது பெற்றியெல்லாம் தாங்களே, சுயமாகத் தீர்மானிக்க முடியும்” என்று ஐ.நா அறிக்கை சுட்டி உள்ளது.

அதே சமயம் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய நாடுகளில் 76 சதவீதம் என்கிற அளவில், இளம் பெண்கள் மற்றும் பெண்கள் பாலியல், கருத்தடை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து சுயமாக முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. 

அதே போல், “சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய மற்றும் தெற்காசியாவில் 50 சதவீதத்திற்கும் குறைவான இளம் பெண்கள் மற்றும் பெண்கள் பாலியல், கருத்தடை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து சுயமாக முடிவுகளை எடுக்க முடியும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், “19 நாடுகளில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபரே, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு தண்டனை இல்லை என்று சட்டம் இருப்பதாகவும்” அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

“அல்ஜீரியா, அங்கோலா, எரிட்ரியா, லிபியா, பொலிவியா, கேமரூன், டொமினிகன் குடியரசு, எக்குவடோரியல் கினியா, ரஷ்ய கூட்டமைப்பு, தஜிகிஸ்தான், டோங்கா உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன. 

மேலும், “பயம் அல்லது வன்முறை இல்லாமல் தங்களின் உடல்கள் மற்றும் எதிர் காலங்களைப் பற்றித் தேர்வு செய்ய கோடிக் கணக்கான பெண்கள் மற்றும் 
சிறுமிகளுக்கு அதிகாரம் இல்லை” என்பதும், இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது. 

குறிப்பாக, “இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட, பெண்கள் தங்களது கணவனின் உடலைத் தொட அனுமதிப்பது பற்றி சுயமாக முடிவுகளை எடுக்க முடியாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்றும், ஆனால் இது தான் நிகழ்கால உண்மை” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

“இப்படியான நிலை தான், உலகில் உள்ள சுமார் 57 ஏழை மற்றும் வளரும் நாடுகளில் உள்ளதாகவும், பாதிக்கும் குறைவான பெண்களுக்கு தங்கள் கணவன் அல்லது துணையுடன் இப்போது உடலுறவு கொள்ள வேண்டாம் என்று சொல்லவோ, கருத்தடை பயன்படுத்துவதையோ அல்லது சுகாதார சேவையை தேர்வு செய்யவோ உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும்” அதிர்ச்சி தரும் தகவல்கள் அதில் வெளியாகி உள்ளன. 

மிக முக்கியமாக, “பல பெண்கள் தாங்கள் திருமணம் செய்யும் நபரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையோ அல்லது இனம், பாலினம், பாலியல் நோக்கு நிலை, வயது அல்லது திறன் காரணமாகக் குழந்தையைப் பெறுவதற்கான சரியான நேரமும் மறுக்கப்படுவதாகவும்” அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.