நாடாளுமன்றத்தில் சக ஊழியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டிய பெண்ணிடம், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு 
கேட்டார்.

ஆஸ்திரேலியா நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தான், இப்படி ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் கடந்த 2019 மார்ச் மாதம் பிரதமர் ஸ்காட் மோரிசனின் ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒருவரால், இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் நடைபெற்றதாகப் பாதிப்புக்கு ஆளான பிரிட்டானி ஹிக்கின்ஸ் என்ற பெண்மணி, இந்த குற்றச் சாட்டை பகிரங்கமாக சுமத்தி உள்ளார். 

மேலும், இந்த குற்றச்சாட்டு குறித்து, பாதிக்கப்பட்ட பெண் பிரிட்டானி ஹிக்கின்ஸ், முறையாகப் புகார் எதுவும் அளிக்க விரும்பவில்லை என்று முதலில் கூறப்பட்டது. 

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனிப்பட்ட முறையில் இது தொடர்பாக காவல்துறையிடம் தகவல் கொடுத்ததாகவும், பணி மற்றும் குடும்பச் சூழல் காரணமாக முறைப்படி புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

தற்போது உள்ள சூழல், தொழில் வாய்ப்புக்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் முறையான புகார் அளிக்க முடிவு செய்து உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் அந்நாட்டின் செய்தியாளர்கள் முன்னிலையில் கூறியுள்ளார்.

அத்துடன், “பாலியல் பலாத்கார துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் இருக்கும் மூத்த ஊழியர்களிடம் இது தொடர்பாக அப்போதே தெரிவித்ததாகவும்” பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய ரெனால்ட்ஸ், கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்த இந்த சம்பவம் குறித்து, எனக்குத் தெரிவிக்கப்பட்டதாக” நேற்று முன் தினம் ரெனால்ட்ஸ் கூறினார். 

இந்த நிலையில் தான், ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், நேற்றைய தினம் பிரிட்டானி ஹிக்கின்ஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

குறிப்பாக, “இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து, அரசாங்கத்தின் பணியிட கலாச்சாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த குற்றச்சாட்டு குறித்து தகுந்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” என்றும், ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதி அளித்தார். 

இந்த புகார் தொடர்பாக அந்நாட்டின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசன், “இப்படி ஒரு துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றும், நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்” என்றும், வெளிப்படையாகவே கூறினார். 

“இந்த இடத்தில் பணி புரியும் எந்தவொரு இளம் பெண்ணும் முடிந்தவரை பாதுகாப்பாக இருப்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்றும், இனி அப்படி ஒரு செயல் இங்கே நடக்காது” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார். இச்சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.