குடிநீர் பற்றாக்குறை நிலவும் பின்தங்கிய நாடுகளில், கை கழுவுவதற்கு போதிய தண்ணீர் இல்லாததால் ஐந்தில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கூறியுள்ளனர் ஐ.நா. அமைப்பினர். இந்தத் தகவலை உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்' என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், தண்ணீர் பஞ்சம் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது எனும்போது, இதை எப்படி கையாள்வது என தெரியாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து ஐ.நா.மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகம் முழுவதும் 300 கோடி மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை என்றும், இதனால் வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு, அவர்களுக்கு சுகாதாரமான வாழ்க்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

மற்ற பின்தங்கிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் அவ்வளவாக இல்லை என்பது ஆறுதலான விஷயம் என வல்லுநர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் பற்றாக்குறை நிலவும் பின்தங்கிய நாடுகளில், கை கழுவுவதற்கு போதிய தண்ணீர் இல்லை. அங்கு ஐந்தில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

ஐ.நா.வின்  நீர்த்துறை அதிகாரி கில்பர்ட் ஹாங்போ, இதுகுறித்து பேசியபோது,

``உலகம் முழுவதும் 3 பில்லியன் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் அவதிபட்டு வருகின்றனர். இவர்களுக்கு அன்றாடம் குளிக்கவும், துவைக்கவும் தண்ணீர் இல்லாத நிலையில், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் இல்லாத காரணத்தால் இவர்கள் கை கழுவுவதை தவிர்க்கின்றனர். இதனால் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. சுத்தமான தண்ணீர் கிடைப்பது பின்தங்கிய நாடுகளில் மிகவும் சிரமம். அழுக்கு படிந்த அல்லது சுத்தமற்ற நீரினால் கைகளைக் கழுவுவது பயனற்றது. இதனால் பிற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

உலகம் முழுவதும் 2030ம் ஆண்டின் இறுதிக்குள் உலக நாடுகள் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை தண்ணீருக்காக செலவழிக்க வேண்டியிருக்கும். இதில் விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீரும் அடங்கும். தண்ணீருக்காக நிதி ஒதுக்கும் இந்த உத்தரவை அனைத்து நாடுகளும் பின்பற்றினாலே ஒழிய நீரின்றி பரவும் நோய்களை தவிர்க்க இயலாது" என்று தெரிவித்துள்ளார்.