அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பில்லர் பயன்படுத்திய பெண்ணின் உதடு 6 மடங்கு பெருத்து பேச முடியாத நிலைமைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது.

பெண்கள் தங்களை அழகை வெளிக்காட்டி கொள்ள அதிகம் விரும்புவார்கள்.  இதற்காக மேக்கப் சாதனங்களை வாங்கி வைத்து கொண்டு மணிக்கணக்கில் தங்களை அழகுப்படுத்தி கொள்வார்கள். தற்காலத்தில் பெண்கள் அழகாக தெரியவேண்டும் என்றும் சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாத பல கிரீம்களையும் போட்டுக்கொள்வதோடு போலி பியூட்டி பார்லர் செல்கின்றனர். இதனால் ஒவ்வாமையும், வீண் பண விரயமும் ஏற்படுகிறது. இதன் அறியாமையை பெண்கள் உணராமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

இந்நிலையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் வசித்து வரும் இரண்டு  குழந்தைகளுக்கு தாயான லாரன் ஈவன்ஸ் என்ற பெண் தனது உதடு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பில்லர் பயன்படுத்தி உள்ளார். அது என்னவென்றால் உதடு சற்று பெரிய அளவில் பருமனாக தெரிவதற்காக, ஊசி போடுவது ஆகும். இதனால் தொடக்கத்தில் சற்று வலி ஏற்படும்.  ஆனால் இதனை தாங்கிகொள்ள முடியும்.

ஆனால் இந்த ஊசியின் பக்கவிளைவுகள் அவரவர் உடம்பை பொறுத்தே அமையும் ஒரு சிலருக்கு ஒத்து கொள்ளும் சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தி விடும். இதுபோன்ற ஒவ்வாமை இருப்பவர்கள் பில்லர்களை தவிர்க்க வேண்டும்.  எனினும், இதுபற்றி எல்லாம் கவலை கொள்ளாத லாரன், பில்லரை பயன்படுத்தி உள்ளார். ஆனால் நேரம் செல்ல செல்ல அவரது உதடு இயல்பில் இருந்து பெருத்து விட்டது.  பயந்து போன லாரன் உடனடியாக மருத்துவரை நாடியுள்ளார். அவரால் பேச முடியவில்லை. சுவாச பகுதிகள் நெருக்கம் அடைந்து சுவாசிக்கவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் நிலைமை மோசமானதும் மருத்துவமனையில் சேர்ந்ததும் லாரனுக்கு அட்ரீனலின் ஊசி போடப்பட்டு உள்ளது. முதலில் அவருக்கு வீக்கம் குறைய வேண்டும் என்பதற்காக ஆன்டிஹிஸ்டமைன் செலுத்தப்பட்டு உள்ளது. ஆனால் மேலும்  நிலைமை மோசமடைந்து அவரால் பேச கூட முடியாத நிலை ஏற்பட்டது.  திரும்பவும் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இதுபற்றி லாரன் கூறும்போது, பபூன் குரங்கின் பின்புறம் இருப்பது போல் எனது உதடு இயல்பை விட 6 மடங்கு பெருத்து விட்டது மேலும் அது அதிக வலியை தந்தது.

அதனைத்தொடர்ந்து நான் நன்றாக உறங்கி கொண்டிருந்தேன்.  என்னை எழுப்பி இன்னும் கொஞ்சம் ஆன்டிஹிஸ்டமைன் கொடுக்க வேண்டும் என கூறினார்கள்.  ஆனால், உதடு பெருத்து கொண்டே போகிறது.  இதனால் பயந்து போயிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஏன் இப்படி நடந்தது? என தெரியவில்லை.  எந்த வயதிலும், எந்த நிலையிலும் ஏதேனும் ஒன்றால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.  இனி மீண்டும் கொஞ்ச காலத்திற்கு லிப் பில்லரை பயன்படுத்தமாட்டேன்.  எனக்கு எதற்கு ஒவ்வாமை ஏற்படுகிறது? என்பது பற்றி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது மீண்டும் நடந்து விடுமோ என்ற நினைப்பே அச்சமூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.