“அமெரிக்கா ஏன் இன்னும் ரஷ்யாவுடன் நேரடியாக மோதவில்லை” என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்து உள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. 

அது முதல் தற்போது வரை உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி ரஷ்ய படைக் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், உக்ரைன் நாட்டில் உள்ள 100 க்கும் அதிகமான ராணுவ தளவாட கட்டமைப்புகள் பெரும் அளவில் அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறி வருகிறது.

இதனால், உக்ரைன் நாட்டை விட்டு சுமார் 20 லட்சம் பொது மக்கள் வெளியேறி உள்ள நிலையில், ஆயிரணக்கணக்கான அப்பாவி பொது மக்களும் உயிரிழந்து உள்ளனர். எனினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 17 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்த சூழலில் தான், ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைன் ராணுவத்திற்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து வருகிறது.

இந்த நிலையில் தான், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக உள்ள 3 ஆம் உலகப் போரை தவிர்க்கவே ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடியாக மோதவில்லை” என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம் அளித்து உள்ளார்.

இது குறித்து வாஷிங்டனில் இருக்கும் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பாவில் உள்ள தங்கள் கூட்டணி நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கப்போவதாக” குறிப்பிட்டார்.

“நேட்டோ நாடுகளுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷ்ய அதிபர் புடின் தோற்று விட்டதாகவும்” அப்போது ஜோ பைடன் விமர்சனம் செய்தார். 

அத்துடன், “உக்ரைனை ரஷ்யா ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற உலக நாடுகளும் ஆதரவாக இருப்பதாகவும்” ஜோ பைடன் காட்டமாக தெரிவித்தார்.

மேலும், “ரஷ்யா ஏற்கனவே மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், புடின் தொடர்ந்து போர் நடத்திக்கொண்டிருந்தால், அங்கு மேலும் பல பொருளாதார தடைகள் அந்நாடு மீது விதிக்கப்படும்” என்றும், பைடன் எச்சரிக்கை விடுத்தார். 

குறிப்பாக, “உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஒருவேளை ரசாயன ஆயுதங்கள் பிரயோகித்தால், அதற்கு அந்நாடு மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும்” என்றும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மிக கடுமையாக எச்சரித்து உள்ளார்.

முக்கியமாக, “3 வது உலக போர் போன்ற அபாயகரமான சூழலை தவிர்க்கவே நேட்டோ விரும்புவதாக” கூறிய ஜோ பைடன், “அடைக்கலம் தேடி அமெரிக்காவிற்கு வரும், உக்ரைன் நாட்டு மக்களை நாங்கள் திறந்த மனதுடன் வரவேற்கிறோம்” என்றும், தெரிவித்தார்.

இதற்கு முன்பாக, “அமெரிக்கா ஆதரவுடன், உக்ரைன் தனது நாட்டில் உயிரியல் ஆயுத தயாரிப்பு ஆய்வகத்தை நடத்தி வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதனை அமெரிக்காவும், உக்ரைனும் மறுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.