உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

இதில் இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

மேலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா இன்று 23-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.  இதனால், உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

அதனைத்தொடர்ந்து இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா இதுவரை ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் ரஷியா மீது மென்மையான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்களான ஸ்டீவ் ஷபொர்ட், ஜோ வில்சன், ரோ ஹானா ஆகியோர் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்துவை தூதரக அலுவலகத்தில் சந்தித்தனர். 

மேலும் இந்த சந்திப்பின் போது, உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷிய அதிபர் புதினுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். மேலும், உக்ரைனில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக இந்தியா பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைன் - ரஷியா இடையே அமைதி திரும்ப முயற்சிக்க வேண்டும் என்றும் அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.