அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற, அவருக்கு ஆதரவாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். கருத்துக் கணிப்புகள் அனைத்தும், ஜோ பிடனுக்கு சாதகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், ``இது முக்கியமான தருணம். மிகப்பெரிய வெற்றியை கொண்டாட அனைவரும் தயாராக இருங்கள். என் குடும்பத்தினருக்கும், அமெரிக்க மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்று இரவுக்குள் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகிவிடும். மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். 

டெக்சாஸ், புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் மட்டுமின்றி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். ஜார்ஜியா, மிச்சிகன், வடக்கு கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெறுவோம். 

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் எதிர்க்கட்சியினர் மோசடி செய்கின்றனர். சட்டத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கோரி உச்சநீதிமன்றம் செல்வேன். வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட வேண்டும்" என்று பேசியுள்ளார். 

முன்னதாக, தபால் வாக்கு எண்ணிக்கையில் பிடன் முன்னிலை பெற வாய்ப்பிருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், வெற்றியை தீர்மாணிக்கவுள்ள முக்கிய மாகாணங்களான ஜார்ஜியா, மிசிகன், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஆகிய மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். ஆனால் இந்த தொகுதிகளில் தீடீரென வாக்குப்பதிவுகள் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த செய்தி, அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வெள்ளை மாளிகையில் ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய ட்ரம்ப், ஜனநாய கட்சி வேட்பாளர் ஜோபைடன் மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் நாங்கள் வெல்லவிருந்த தொகுதிகளில் மோசடி நடைபெற்றுள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் நேற்றைய தினம் தேர்தல் நிறைவடையும் நேரத்தில் வெள்ளை மாளிகை முன்பாக திரண்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறு கைகலப்பு ஏற்பட்டது. தேர்தலையொட்டி நிகழும் வன்முறைகளை தடுக்க 16 மாகாணங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெள்ளை மாளிகை முன்பாகத் திரண்ட போரட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை தான் ஏற்காமலும் போகலாம் என ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் திரண்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தத் தேர்தலில், அதிக ஓட்டுகள் பதிவு நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2016-இல் நடந்த தேர்தலில், 13.89 கோடி பேர் வாக்களித்தனர். இதில், 4.70 கோடி பேர் மட்டுமே, தபால் ஓட்டுகளை அளித்தனர். தற்போது, கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், தபால் ஓட்டுகள் மூலமாக வாக்களிக்க, அனைத்து மாகாணங்களில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட, இரண்டு மடங்கு அதிகமானோர் இம்முறை வாக்களித்துள்ளனர். கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், வாக்குப்பதிவுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.