ஆஸ்திரேலியாவில் இடைவிடாமல் கொட்டி வரும் பேய் மழையால் அங்குள்ள 2 மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

flood

பூமியின் பருவநிலை மாற்றத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்கும் நாடுகளில் முன்னணி நாடாக ஆஸ்திரேலியா மாறி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி 2020-ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ அங்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காட்டுத்தீயை தொடர்ந்து, தற்போது பெருமழை ஆஸ்திரேலியாவை நிலைகுலைய செய்து வருகிறது. அந்த நாட்டின் கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக பேய் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட 3-வது நகரமும், குயின்ஸ்லாந்தின் தலைநகருமான பிரிஸ்போன் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்டினி ஆகிய இரு நகரங்களும் கனமழையால் பேரழிவு விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றன.

மேலும் பிரிஸ்போன் நகரில் ஒரு வருடம் முழுவதும் பெய்யும் மழையில் 80 சதவீதம் மழை கடந்த 2 மாதங்களில் பெய்துள்ளதாகவும், அதே போல் சிட்னி நகரில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் இதுவரையில் வருடாந்திர மழையில் 75 சதவீதம் பெய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைத்தொடர்ந்து இப்படி இருமாகாணங்களையும் புரட்டிப்போட்டு வரும் பேய் மழையால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஊர்களுக்குள் புகுந்து கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கி உள்ளன. இதனால் இதுவரையில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மேலும் பேய் மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக மின்சாரம், குடிநீர் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டதோடு, தகவல் தொடர்பு, சாலை போக்குவரத்து ஆகியவையும் முடங்கியுள்ளதால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை தத்தளிக்க வைத்துள்ள இந்த கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2,500-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் வெள்ளம் வடியாத சூழலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மழை, வெள்ளம் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளையும் துரிதப்படுத்தவில்லை என பாதிப்புக்குள்ளான மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்துக்கு சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரீசன் மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள அவசர நிலையை பிரகடனப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.