“யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை, நான் உக்ரைன் தலைநகர் கீவ் வில் தான் இருக்கிறேன்” என்று, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நெஞ்சை நிமிர்த்தி, உறுதியுடன் பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 13 வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

அதன் படி, கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரில், உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கும் நிலையில், உக்ரைன் நாடே சின்னாபின்னமாகி உள்ளன. அங்கு, காணும் இடமெல்லாம் முற்றிலும் சேதம் அடைந்தே காணப்படுகிறது.

ஆனாலும், “மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக” ரஷ்யா கடந்த 5 ஆம் தேதி அறிவித்திந்த போதிலும், பகுதி நேரமாக குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே போரை நிறுத்திவிட்டு, மற்ற நேரங்களில் ரஷ்யா தனது போரை தெடர்ந்து வருகிறது.

இந்த போர் காரணமாக, உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், உக்ரைன் நாட்டை விட்டு, கிட்தட்ட 17 லட்சம் பேர் அந்நாட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

முக்கியமாக, உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இது வரை 406 பொது மக்கள் உயிரிழந்து உள்ளதாக, உக்ரைன் அரசு அறிவித்து உள்ளது. 

அத்துடன், உக்ரைனில் இன்று 13 வது நாளாக தாக்குதலை தொடரும் ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ், கார்க்கிவ், மரியுபோல், சுமி ஆகிய நாகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் காலையில் தெரிவித்தன.

இந்த சூழலில், ரஷ்யாவின் தாக்குதலை தடுத்து, இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகளும் தீவிரமாக முயற்சித்தும் வரும் நிலையில்,இந்த முயற்சிகளின் பலனாக “உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக” ரஷ்யாவும் அறிவித்து உள்ளது.

ஆனாலும், ரஷ்யாவின் தாக்குதல் இன்னொரு பக்கம் தொடர்ந்து வருவதால், “போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு, இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகளிடம் தொடர்ந்து கோரிக்கை” விடுத்து வருகிறார்.

மேலும், “உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும்” ரஷ்ய தரப்பில் தொடர்ந்து பல்வேறு செய்திகள் உலா விடப்படுகிறது. 

இந்த நிலையில் தான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தற்போது ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

அந்த வீடியோவில் பேசிய உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “நான் தலைநகர் கீவ் வில் உள்ள அதிபர் மாளிகையில் தான் இருக்கிறேன்” என்று கூறி, அங்கிருந்தபடியே ஜெலன்ஸ்கி அந்த வீடியோவை எடுத்து வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் பேசி உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “நான் தலைநகர் கீவ் வில் உள்ள பென்கோவா பகுதியில் தான் இருக்கிறேன். யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. புதினை எதிர்கொள்ள எவ்வளவு நாள் தேவைப்படுகிறதோ, அவ்வளவு நாளும் நான் என் தலைநகர் கீவ்வில் தான் இருக்கப்போகிறேன்” என்று, தனது நெஞ்சை நிமிர்த்தி பேசி, தங்கள் நாட்டு ராணுவ வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் இந்த உறுதியான தன்னம்பிக்கையான பேச்சு, உக்ரைன் நாட்டு மக்களுக்கு புது தெம்பை ஏற்படுத்தி இருப்பதுடன், உலகம் முழுவதும் பெரும் வைரலாகி வருகிறது.