அமெரிக்காவில் இரட்டையாவார்களாகப் பிறந்து, இரட்டையர்களைத் திருமணம் செய்தது மட்டும் இல்லாமல், ஒரே சமயத்தில் சகோதரிகள் இருவரும் கர்ப்பமடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகளான பிரிட்டானி மற்றும் பிரையானா டியானி ஆகிய இருவரும், சிறு வயது முதலே ஒரே மாதிரியான உடை, ஒரே பள்ளி, ஒரே பாடம் என்று ஒற்றுமையாக ஒன்றாகவே வளர்ந்து வந்தனர். அவர்களது பெற்றோர்களும், அப்படித்தான், அந்த இரட்டை சகோதரிகளை வளர்த்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த இரட்டை சகோதரிகள் முன்கூட்டியே திட்டமிட்ட படி, இரட்டை சகோதரர்களான ஜோஷ் மற்றும் ஜெரிமி சால்யர்ஸ் ஆகிய
இரட்டையர்களைக் கடந்த 2018 ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டனர்.

தங்களது திருமண புகைப்படம் மற்றும் திட்டமிடலைச் சகோதரிகள் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கங்களில் வெளியிட்டனர். இந்த செய்தி மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலானது. இதன் காரணமாக, இரட்டை சகோதரிகள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமடைந்தனர். 

இதனையடுத்து, அமெரிக்க ஊடகங்கள் இரட்டை சகோதரிகளைப் பேட்டி எடுத்து, இன்னும் பிரபலமடைய வைத்தது. 

குறிப்பாக, ஒரு டி.வி. நிகழ்ச்சியில், பேசிய அந்த  இரட்டை சகோதரிகள் “சிறு வயது முதல் இரட்டை சகோதரிகளான நாங்கள், அனைத்து காரியங்களையும் ஒன்றாகவே செய்து வந்தோம். அதே நேரத்தில், இரட்டை சகோதரர்களையும் தற்போது திருமணம் செய்ய விருப்பப்பட்டு அதன்படியே திருமணமும் செய்து 
கொண்டோம். 

மேலும், தாங்கள் ஒரே சமயத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பப்படுகிறோம். எங்களுடைய இந்த ஆசையும் நிறைவேறும் என்றே நம்புகிறோம்” என்றும், அந்த டி.வி. நிகழ்ச்சி அவர்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இரட்டை சகோதரிகளான பிரிட்டானி மற்றும் பிரையானா ஆகியோர், ஏற்கனவே கூறியதைப் போலவே, தங்களது மகிழ்ச்சியான செய்தி ஒன்றை, தற்போது தங்களுடைய இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்து உள்ளனர்.

இதில், “இரட்டை சகோதரிகளான நாங்கள் இருவரும், ஒரே சமயத்தில் கர்ப்பமடைந்து உள்ளோம். பிறக்கும் 2 குழந்தைகளையும், உடன் பிறப்புகளாகக் கருதி இரண்டு தாய், இரண்டு தந்தை என ஒரே குடும்பமாக வளர்க்க விரும்புவதாகவும்” அவர்கள் கூறி உள்ளனர். இதனால், இரட்டை சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் தற்போது குவிந்து வருகிறது. இதனால், இரட்டை சகோதரர்கள் இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.

அத்துடன், இரட்டை சகோதரிகளின் இந்த இன்ஸ்டா பதிவும், இணையத்தில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.