கிழக்கு லடாக்கில் கைப்பற்றிய முக்கிய மலைகளை காலி செய்யுமாறு சீனா இந்தியாவை கேட்கிறது. அதற்கு இந்தியா சீனாவிடம் முதலில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஆக்கிரமிக்கும் முன்பு இருந்த சாலை வரைபடத்தை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கையகப்படுத்திய இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் இருந்து சீனா வெளியே போகப்போகிறதா என்பது தெரியவில்லை, ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் பங்கோங் த்சோ ஏரியின் தென் கரையில் உள்ள மலை உச்சி சிகரங்களை இந்தியா காலி செய்ய வேண்டும் என்று சீனா கோருகிறது எனஉயர் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான லடாக் எல்லை பிரச்சினை, தொடர்கதையாய் நீண்டு வருகிறது. சீனாவின் அத்துமீறல்களால், எல்லையில் போர் மேகம் சூழ்ந்தது.

இந்நிலையில் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், சீன வெளியுறவு மந்திரி வாங் யியும் கடந்த 10-ந் தேதி சந்தித்து பேசி, 5 அம்ச சமரச திட்டம் ஒன்றை அறிவித்த பின்னர் இரு தரப்பு தளபதிகள் மட்டத்திலான 6-வது சுற்று பேச்சு வார்த்தை கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் இரு தரப்பும் எல்லையில் படை குவிப்பை தவிர்க்க முடிவு எடுத்தது நல்ல அறிகுறியாக அமைந்திருக்கிறது.

இந்தியா - சீனா இடையே நிலவும் பிரச்சினைக்கு உதவத் தயார் என்றும், இரு நாடுகளும் தங்களுக்கு நிலவும் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் என்று நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசும்போது, “சீன - இந்திய உறவில் சமீபகாலமாக சிரமங்கள் எழுந்துள்ளன. விரைவில் அவர்கள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். எங்களால் இந்த விவகாரத்தில் உதவ முடிந்தால், நாங்கள் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா- சீனாவுக்கு இடையே சமீபகாலமாக எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. அண்மையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதில் இருந்தே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளைக் குவித்துள்ளன. எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும், பதற்றம் குறையவில்லை. எல்லைப் பதற்றத்துக்கு சீனாதான் காரணம் என்று இந்தியாவும், இந்தியாதான் காரணம் என்று சீனாவும் மாறி மாறி பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான் இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உதவுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த பிரச்சினை குறித்து அமெரிக்காவின் ‘வால்ஸ்டிரீட்’ பத்திரிகையும் கருத்து தெரிவித்து இருக்கிறது.

அந்த பத்திரிகையில், “எல்லை மோதல் இந்தியாவை சமச்சீரற்ற பதிலை காண தூண்டுகிறது. அதன் கடற்படை வலிமையை நெகிழச்செய்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுடன் கூட்டு கடற்படை பயிற்சியை தீவிரப்படுத்துகிறது. புதிய கப்பல்களை கட்டுகிறது. இந்திய பெருங்கடலின் கடல் போக்குவரத்தை இந்தியா கண்காணிக்க அனுமதிக்கும் வகையில் கடலோர கண்காணிப்பு நிலையங்களின் வலையமைப்பை உருவாக்குகிறது” என கூறப்பட்டு உள்ளது.