ரஷ்யாவை தொடர்ந்து அமெரிக்காவில் வெகுவிரைவில் தடுப்பூசியொன்று விநியோகத்துக்கு வரும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் அஸ்ட்ரஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கிவிட்டதாகவும், பரிசோதனைகள் முடிந்து, தடுப்பூசி விரைவில் சந்தைக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.

ரஷ்ய தடுப்பூசியை போல இதில் பிரச்னை இருக்காது என்று சொல்லப்பட்டாலும், இதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

அது, ஏற்கெனவே உலக சுகாதார மையத்தில் இருந்து வெளியேறவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்திருக்கிறது என்பதால், இந்த தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்தோடு சேர்ந்து இயங்காது என சொல்லப்படுகிறது. அதேபோல உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியையும் அளிக்கமுடியாது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஏராளமான சீர்திருத்தங்கள் தேவை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜூட் டீர் பேசியபோது, ``கொரோனாவை வீழ்த்த சர்வதேச கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும். ஊழல் நிறைந்த உலக சுகாதார மையமும், சீனாவும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களுடன் அமெரிக்கா இணையாது. புதிய கோவிட்-19 தடுப்பூசி அமெரிக்க தரநிலைகளுக்கு ஏற்ப இருப்பதையும், உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதையும் அதிபர் நிச்சயமாக உறுதிசெய்வார்” என்று தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 61 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் கிட்டதட்ட 63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரம் இந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் வேட்பாளராக நிற்கும் ட்ரம்ப் பின்னடைவை சந்திக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகின்றது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தினால் தான் ஓரளவுக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தடுப்பூசியை விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் செயல்படுகிறார் ட்ரம்ப்.

அதேநேரம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிபர் பதவிக்கு குடியரசுக்கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தி மக்களை கவர ட்ரம்ப் திட்டமிட்டு வருகிறார். தேர்தலில் தனக்கான வாய்ப்பாக தடுப்பூசியை பயன்படுத்தவும் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம், மாகாண அரசுகள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் தயாராக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏ மற்றும் பி என 2 தடுப்பூசிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவற்றை சேமிப்பது, பாதுகாப்பது மற்றும் விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் மீது தொடந்து பைடன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய பைடன், கொரோனா பெருந்தொற்றை ட்ரம்ப் அலட்சியப்படுத்தி விட்டதாகக் குற்றம்சாட்டினார். ட்ரம்ப் ஆட்சி அமைதியின்மையை உருவாக்கியுள்ளதாகவும், எந்த முக்கிய பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.