டோக்கியோவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அங்கு நடைபெறும் “ஒலிம்பிக் போட்டிகளின் நிலை என்ன?” என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. அதன் படி, வரும் 23 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கி, அடுத்த மாதம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று வரை இந்த போட்டிகள் நிறைவு பெறுகிறது. 

இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட இந்திய அணியை, இந்தியத் தடகள சம்மேளனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த பட்டியலில், நம் தமிழ் மண்ணைச் சேர்ந்த 3 தமிழ் வீராங்கனைகள் அலங்கரித்து, இந்த ஒலிம்பிக் போட்டியில் களம் காண்கின்றனர்.

அத்துடன், இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்று உள்ளனர். இதில், ஒட்டு மொத்தமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில் தான், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது மேலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது ஜப்பான் அரசை கவலை அடையச் செய்துள்ளதால், இந்த வைரஸ் நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், டோக்கியோவில் தற்போது அவசரக் கால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டு உள்ளது. 

“ஒலிம்பிக் போட்டிகள் மூலமாக புதிய கொரோனா அலை உருவாகாமல் தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும்” ஜப்பான் அரசு தெரிவித்து உள்ளது.

அதனால், “ஒலிம்பிக் போட்டிகளின் நிலை என்ன?” என்பது பற்றி கேள்வி எழுந்த போது, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ள நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பார்வையாளர்கள் இன்றி நடத்தவும், ஜப்பான் அரசு திட்டமிட்டு வருகிறது. 

ஆனால், “ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு அந்நாட்டில் தற்போது மிக கடுமையான எதிர்ப்பும்” கிளம்பி இருக்கிறது.

மேலும், “ஜப்பானில், ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது இன்னும் தள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி” அந்நாட்டில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இவற்றுடன், “ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளி வைக்க ஒரு பக்கம் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பக்கம் டோக்கியோ நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இதனால், “ஜப்பானில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் அனைவரும் இன்னும் முழுமையாகக் கடைப்பிடிக்க ஒத்துழைக்க வேண்டும்” என்று, ஜப்பான் பிரதமர் யோசிஹைட் சுகா வலியுறுத்தி உள்ளார்.

குறிப்பாக, “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நேரில் பார்க்கவும் பார்வையாளர்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கவும்” ஜப்பான் அரசு தற்போது முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இவற்றுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள், ஏற்கனவே வெளிநாட்டுப் பார்வையாளர்களை முற்றிலுமாக தடை செய்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில், “ஜப்பானில் உள்ள உள்நாட்டுப் பார்வையாளர்களுக்கு 50 சதவீதம் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கலாம்” என்றும், அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தனர். ஆனால், தற்போது கொரோனா தொற்று அவசர நிலை அந்நாட்டில் அறிவிக்கப்பட்டதால், ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தையும் பார்வையாளர்கள் இன்றி நடத்தவும் தற்போது முடிவு செய்யப்பட்டது.

முக்கியமாக, “டோக்கியோவில் பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்” என்பதை, டோக்கியோ ஒலிம்பிக் அமைச்சர் தற்போது உறுதி செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.