பெண்கள் அதிக அளவில் மதுபானம் குடிக்க தூண்டப்படுவதற்கான காரணம் பற்றி வெளியான ஆய்வு முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக குடி குடியை கெடுக்கும் என்பது தெரிந்த பின்னரும் மது அருந்தும் ஆண்கள் அதிக அளவில் உள்ளனர்.  ஆனால் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது அருந்த ஆரம்பித்துள்ளனர்.

படிப்பு, வேலை என்றில்லாமல் ஆண், பெண் சமத்துவம் என்பது மது அருந்தும் பழக்கத்திலும் தற்காலத்தில் காணப்படுகிறது.  ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்பதுபோல் அவர்களும் ஒரு கையில் சிகரெட் மற்றொரு கையில் மதுபானம் என்று மாறிவிட்டனர்.

நகர்ப்புற ஆடம்பர வாழ்க்கை முறையில் இது சர்வசாதாரணம் என்றாகி விட்டது.  குடிப்பழக்கத்திற்கு ஆளாவது, அடிமையாகும் அளவு குடிப்பதற்கு என்ன காரணம் என பல ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.  

drink women america research

அந்த வகையில் அமெரிக்காவின் அரிசோனா ஸ்டேட் பல்கலை கழகத்தின் உதவி ஆராய்ச்சி பேராசிரியையான ஜூலி பேட்டக்-பெக்கம், பெண்கள் அதிக அளவில் குடிக்க தூண்டப்படுவதற்கு என்ன காரணம் என்பது பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி பரிசோதனை ஆய்வகம் ஒன்றில் ஊழியர்கள், நாற்காலிகள், உரையாடல்கள் ஆகியவற்றுடன் கூடிய பார் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.  இந்த ஆய்வில் 105 பெண்கள் மற்றும் 105 ஆண்கள் பங்கேற்றனர்.

ஆய்வில் கலந்து கொண்டவர்கள், மனஅழுத்தம் சார்ந்த மற்றும் மனஅழுத்தம் சாராத சூழல்களுடன் கூடிய பல வகை குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.  அந்த அனுபவத்துடன் மதுபானங்களை அவர்கள் எடுத்து கொண்டுள்ளனர்.

இதேபோன்று ஆய்வில் ஒரு பிரிவினர் ஆல்கஹால் கலந்த குளிர்பானங்களும், மற்றொரு பிரிவினர் ஆல்கஹால் கலக்காத குளிர்பானங்களும் எடுத்துள்ளனர்.  இதன்பின்பு ஒன்றரை மணிநேரத்திற்கு அனைவரும் தடையின்றி மதுபானம் குடித்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இவற்றை வைத்து ஆய்வு மேற்கொண்டதில் முதலில் நார்மலான சூழலில் ஆல்கஹால் கலந்த மதுபானம் குடித்த ஆண்கள், மனஅழுத்த சூழலில் குளிர்பானம் குடித்த ஆண்களை விட அதிக அளவில் குடித்துள்ளனர்.

ஆனால் பெண்கள் விசயத்தில் குளிர்பானம், மதுபானம் என்று எந்த பாரபட்சமுமில்லை.  அவர்கள் மனஅழுத்த சூழல் ஏற்பட்டபோது முன்பு குடித்ததற்கும் கூடுதலாக அதிக அளவில் மதுபானங்களை குடித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதன் முடிவில் பெண்களை விட ஆண்கள் அதிகளவில் மதுபானம் பயன்படுத்தும் விகிதம் உள்ளது.  எனினும் பெண்கள் எளிதில் இதில் அகப்பட்டு விடுகின்றனர்.  மதுபானம் குடிக்கும் பெண்கள் அது சார்ந்த விவகாரங்களில் சிக்கும் ஆபத்தும் அதிகமுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

women drinkers

மது அருந்தும் பழக்கம் பொதுவாக ஆண், பெண் இருபாலரின் உடல்நிலைக்குமே கேடு என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. இதனால்தான் திரைப்படங்களில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் ஆகியவை உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பவை என்ற வாசகமும் திரைப்பட காட்சிக்கு முன்னதாக திரையிடப்படுகிறது.

எனினும் மறுபக்கம் மது அருந்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர ஒழிந்தபாடில்லை. சமீபத்தில் இதேபோன்று இந்தியாவில் நாடு முழுவதும் யு.பி.எஸ். என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அதில் இந்தியாவில் மதுபானங்கள் விற்பனை எவ்வளவு, எவ்வளவு பேர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர், ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மது அருந்தும் விகிதாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் இந்தியா முழுவதும் சுமார் 16 கோடி பேர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளது தெரியவந்தது. மது அருந்தும் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்கள். 

குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டங்களில்தான் மதுஅருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.