“உலகம் முழுவதும் கண்டறியப்பட்டு உள்ள கொரோனா வைரஸ்களில் ‘ஒமைக்ரான்’மிகவும் மோசமானது” என்று மருத்துவ விஞ்ஞானிகள், உலக நாடுகளை  எச்சரித்து உள்ளனர்.

கடந்த 2019 டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் சீனாவில் முதன் முதலாக பரவத் தொடங்கியதாக கூறப்படும் நிலையில், உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்ததுடன் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

தற்போது இந்தியாவில் கொரோனாவின் 2 அலை சற்று ஓய்ந்திருந்தாலும், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் 3 வது அலை ஓய்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் தான், கொடிய கொரோனா வைரசானது தற்போது புதிதாக உருமாறி, ஒட்டுமொத்த உலக நாடுகளையே அலற வைத்திருக்கிறது.

தற்போது புதிதாக உருமாறியிருக்கும் இந்த வைரஸ்க்கு (B.1.1.529) “ஒமைக்ரான்” என்று, விஞ்ஞானிகள் பெயர் வைத்து உள்ளனர்.

இந்த வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் தான் முதலில் காணப்பட்டதாக கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு தான், முதன் முதலாக இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் தற்போது பரவி இருக்கிறது. 

அத்துடன், இந்த வைரஸ் இது வரை 60 பேருக்கு இந்த வைரஸ் பரவி இருக்கிறது. 

குறிப்பாக, இது வரை உலகம் முழுவதும் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களில் இது தான் மிக மோசமானது என்று மருத்துவ ஞ்ஞானிகள் கடுமையாக எச்சரித்து உள்ளனர்.

மிக முக்கியமாக, நோய் எதிர்ப்புச் சக்தியை தவிர்க்கும் தன்மையை இந்த வைரஸ் கொண்டிருப்பது தான் மருத்துவ துறையை கவலை கொள்ள செய்திருக்கிறது.

மேலும், இந்த வகை வைரசுக்கு எதிராக, எந்த தடுப்பூசிகளும் பெரிய அளவில் வேலை செய்து விடாது என்று மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

முக்கியமாக, “இந்த உருமாறிய கொரோனா  ‘ஒமைக்ரான்’ என்னும் வைரஸ், அதிவேகமாக பரவும் தன்மை கெண்டது” என்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித் உலக நாடுகளை எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய தென் ஆப்பிரிக்காவின் தொற்று நோய் பதிலளிப்பு மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா. “இது தற்போது பரவி வந்துள்ள வைரஸ் வகைகளில் இருந்து மிகவும் வித்தியாசமானது” என்றும் தெரிவித்து உள்ளார்.

அதே போல், “இது பரிணாம வளர்ச்சியில் மிகப் பெரும் பாய்ச்சலைக் கொண்டு உள்ளது என்றும், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான பிறழ்வுகளை கொண்டிருக்கிறது” என்றும், அவர் கவலையுடன் தெரிவித்து உள்ளார்.

“இப்படியாக உருமாறிய வைரசில் 50 மரபணு பிறழ்வுகள் இருக்கின்றன என்றும், இந்த வைரசின் ஸ்பைக் புரதத்தின் இடையே மட்டுமே 30 க்கும் மேலான பிறழ்வுகள் உள்ளன என்றும், பொதுவாக தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழைகளைத்தான் குறி வைக்கின்றன” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“மனித உடல்களுக்குள் ஊடுருவ கொரோனா வைரஸ் இந்த புரத இழையைத்தான் பயன்படுத்துகின்றன” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில் தான், இந்த வைரஸ் பற்றி ஆலோசிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு அவசரமாக கூடியுள்ளது. இது குறித்து நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமைக்ரான்’ என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டி உள்ளனர்.

இதனிடையே, “இந்த புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருகிறவர்களையும், இந்த நாடுகளின் வழியாக வருகிறவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்” என்று, மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.