உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 16-வது நாளாக நீடித்து வருகிறது.  இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்துள்ள போர், அந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் உயிருக்குப் பயந்து கொண்டே இருப்பதை விட இடம் பெயர்ந்து விடுவோம் என கருதி உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவேகியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இப்படி இதுவரை 20 லட்சம் பேர் அகதிகள் ஆகி இருக்கிறார்கள்.

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் நண்பர்களுடன் அண்டை நாடுகளுக்கு அனுப்பிவைக்கிற பரிதாப நிகழ்வுகளும் அரங் கேறுகின்றன. இந்நிலையில் உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக யுனிசெஃப் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய இயக்குனர் அப்ஷான் கான் கூறியதாவது: நாட்டை விட்டு வெளியேறிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிர்ச்சி அடைய வைக்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் நிலைமை எவ்வளவு அவ நம்பிகையானது என்பதை இந்த போர் காட்டுகிறது. 

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யுனிசெப் உதவி வருகின்றது. இதுவரை, கிட்டத்தட்ட 70 டன் பொருட்களுடன் ஆறு லாரிகளில் உக்ரைனுக்கு வந்துள்ளன. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு கருவிகள் இதில் அடங்கும். உக்ரைனின் மோதல்களால் பாதிக்கப்பட்ட 5 வெவ்வேறு பகுதிகளில் உள்ள 22 மருத்துவமனைகளில் உள்ள 20,000 குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்குப் பயனளிக்கும் வகையில் மருத்துவப் பொருட்களை விநியோகிக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றத்தின் காரணமாக பெரும்பாலானோர் குடும்பத்துடன் போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, மால்டோவா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக யுனிசெஃப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தை உதவிகளையும் நாங்கள் செய்கிறோம், ஆனால் போர் முடிவுக்கு வர வேண்டும். அமைதி மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார்.