“தலீபான்களின் தலைவரான முல்லா ஹைபத்துல்லா அஹுன்ஸாடா புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார்” என்று, தலீபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி தகவல் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில், அந்நாட்டில் அடுத்தடுத்து பல அதிரடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக சரியாக, கடந்த 15 ஆம் தேதியே ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

அத்துடன், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் முழுமையாகக் கைப்பற்றி இருக்கும் நிலையில், அந்த நாட்டில் இருந்து கடந்த 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் அனைத்தும் முழுமையாக வெளியேறி உள்ளன.

அத்துடன், தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால்,  ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விமானம் மூலம் தொடர்ந்து மீட்கப்பட்டு வந்தார்கள்.

தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தப்பி செல்ல தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், அந்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் என பலரும், வெளிநாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாத தலீபான்கள், தங்களது ஆட்சியை அமைப்பதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர். 

ஏற்கனவே, இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காகக் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு தலீபான் தலைவர்களையும் சந்தித்துப் பேசி வந்தனர்.

இந்த நிலையில், ஆப்கான் தலைநகர் கந்தகாரில் தலீபான் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்தினார்கள். 

ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தான் நாட்டிலும் ஆட்சி முறையைக் கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், தலீபான் இயக்கத்தில் பல பிரிவுகள் இருப்பதால், அவர்கள் அனைவருக்கும் ஆட்சியில் முக்கிய பதவி வழங்கும் வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், “தலீபான்களின் தலைவரான முல்லா ஹைபத்துல்லா அஹுன்ஸாடா, புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார்” என்று, தலீபான்களின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி உறுதிப்படத் தெரிவித்து உள்ளார்.

மேலும், “நாங்கள் அறிவிக்கும் இஸ்லாமிய அரசு மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்றும், அரசாங்கத்தில் விசுவாசமான தளபதியான ஹைபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பதில் சந்தேகம் இல்லை என்றும், அவர் அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக இருப்பார்” என்றும், அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

குறிப்பாக, “தலீபான்கள் செப்டம்பர் 3 ஆம் தேதி, ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவிப்பார்கள்” என்று, ரஷ்ய செய்தி நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.