“இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்றும், எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை” என்றும், தலீபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தலீபான்
தீவிரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதனால், அந்நாட்டில் தலீபான்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துபவர்கள் என்று கூறப்படுவதால், அந்நாட்டு மக்கள் பலரும், அந்த நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகிறார்கள். 

அத்துடன், அந்த நாட்டை விட்டு தப்பிச்செல்லாத விரும்பாத அந்நாட்டு மக்கள் பலரும், தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இதனால், அந்நாட்டில்
பரவலாக பெரும் அச்சமே நிலவி வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப் படைகளை வீழ்த்தி, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து தாலீபான்கள், முதல் முறையாக செய்தியாளர்கள்
சந்திப்பை நடத்தி இருக்கிறார்கள். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தலீபான்களின் எதிர்காலம், அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கி உள்ளனர்.

அதன் படி, “ஆப்கானிஸ்தானில் சண்டை முடிந்தது” என்று, குறிப்பிட்டனர். 

“தலைநகர் காபூல், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும், போரின் போது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஒரு விபத்து தான் என்றும், அவை
உள்நோக்கத்துடன் கூடியது கிடையாது” என்றும், அவர்கள் விளக்கம் அளித்தனர்.

“தாலீபான்கள் அனைவரையும் மன்னித்து விட்டது என்றும், முன்னாள் ராணுவ வீரர்கள், வெளிநாட்டு படைகளுக்காக வேலை செய்தவர்கள் என யார் மீதும்
எங்களுக்கு பழிவாங்கும் எண்ணமே கிடையாது என்றும், அவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலங்களை நாங்கள் ஒருபோதும் சோதனையிட
மாட்டோம்” என்றும், அவர்கள் உறுதிப்படத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, “ஆப்கானிஸ்தானில் இருந்து உலகின் எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் இருக்காது என்பதை நாங்கள் உலக நாடுகளுக்கு உறுதி அளிக்கிறோம்” என்றும்,
வெளிப்படையாகவே அறிவித்தனர். 

“இஸ்லாமிய சட்டத்தின் கட்டமைப்புக்கு உட்பட்டு, இந்நாட்டில் உள்ள பெண்களின் உரிமைகளுக்கு முழு மதிப்பளிப்போம் என்றும், நாட்டில் ஊடக சுதந்திரமும்
அளிக்கப்படும்” என்றும், தலீபான்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசினார்கள். 

இதனிடையே, தலீபான்கள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக உலக அளவில் பரவி வரும் நிலையில், “தலீபான்கள் அமைப்பின் ஃபேஸ்புக் கணக்குகள்
முடக்கப்படுவதாக” ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. 

மேலும், “தலீபான்கள் அமைப்பை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை தடை செய்து வருகிறோம்” என்றும், கூறியுள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக, தலீபான் மற்றும் அவர்களுக்கு ஆதரவான வாட்ஸ்ஆப் கணக்குகளும் முடக்கப்படுவதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.