உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்களுக்கு புதிய நம்பிக்கை வெளிச்சமாக அந்நாட்டின் பல மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

இதில் இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 மேலும் உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதே வேளையில் ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு, அந்நாட்டில் மருத்துவம் பயின்று வந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களுக்கும் பேரிடியாக அமைந்தது. உயிர் பிழைத்தால் போதும் என்று தாயகத்துக்கு தப்பி வரவேண்டிய நிலையில் படிப்பு அந்தரத்தில் நின்று போனது. மத்திய அரசாங்கத்தின் ‘ஆபரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் சுமார் 20 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.

மருத்துவ படிப்பை எப்படி தொடரப்போகிறோம் என்றும், தங்கள் எதிர்காலம் குறித்தும், உக்ரைனில் படித்துவந்த இந்திய மாணவர்கள் கவலையும், குழப்பமும் அடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு புதிய நம்பிக்கை வெளிச்சமாக, பல உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன.டேனிலோ ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், இவானோ-பிரான்கிவ்ஸ்க் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம், வின்னிட்சியா தேசிய பிரோகோவ் மருத்துவ பல்கலைக்கழகம், போகோமேலெட்ஸ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை நேற்று முன்தினம் முதல் இணையவழி வகுப்புகளை தொடங்கின.

இந்நிலையில் தற்போது பெரும்பாலும் மேற்கு உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், மற்ற பல்கலைக்கழங்களும் இவ்வழியிலான வகுப்புகளை வரும் நாட்களில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தாயகம் திரும்பியுள்ள இந்திய மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். ரஷியாவின் இடைவிடாத ஏவுகணை தாக்குதல் தொடரும் நிலையில் பல பேராசிரியர்கள் தங்கள் வீடுகள் அல்லது மறைவிடங்களில் இருந்து வகுப்புகளை எடுப்பதாகவும் அவர்கள் கூறினர். தினசரி வகுப்புகளுக்கான அட்டவணையும் அளிக்கப்பட்டுள்ளது.

பாடங்களை சிலைடுகள், வீடியோக்கள் மூலம் முடிந்தவரை நன்றாக புரிய வைக்க ஆசிரியர்கள் முயன்றாலும், செய்முறை வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லையே என்பது மாணவர்கள் பலரது வருத்தமாக உள்ளது. ஆனால் ஒன்றுமில்லாததற்கு இது பரவாயில்லை என்று தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக்கொண்டும் உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் வகுப்புகள் தொடங்கியது உணர்ச்சிகரமான தருணம் என்று பல இந்திய மாணவர்கள் தெரிவித்தனர். ‘எங்கள் ஆசிரியர்களும் உணர்ச்சிவசப்பட்டனர். தற்போது நடக்கும் போர் குறித்து நாங்கள் சிறிது நேரம் பேசினோம். இந்த நெருக்கடியான நேரத்திலும் வகுப்புகளை நடத்த ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது’ என்று சில மாணவர்கள் கூறினர். தங்களுக்கான தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இப்போதைக்கு மாணவர்களுக்கு இணைய வழியில் தினசரி டெஸ்டும், வாய்மொழி தேர்வும் நடைபெறுகின்றன. இணையவழியில்தான் என்றாலும், மீண்டும் படிப்பு தொடங்கியிருப்பது இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ஆறுதலை தந்திருப்பதை அறிய முடிகிறது.