அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி வேற லெவல் சாதனை படைத்து உள்ளனர்.

உலகம் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதற்கு, விண்வெளிக்கு சுற்றுலா சென்ற 4 பேர் மீண்டும் பூமிக்கு திரும்பி உள்ள நிகழ்வே சாட்சியாகத் திகழ்கிறது. இது, விண்வெளி வரலாற்றில் வேற லெவல் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

“சுற்றுலா என்றதுமே, உலகில் எந்த நாட்டிற்குச் செல்லலாம்?” என்பது தான் பலரது தேடலாக இருக்கலாம். ஆனால், விண்வெளிக்கு ஆய்வுக்காக மட்டுமல்லாமல் சுற்றுலாவும் செல்லலாம் என்கிற சூழல், தற்போது ஏற்பட்டிருக்கிறது.

அந்த அளவிற்கு உலகின் தகவல் தொழில் நுட்பமும் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்திருக்கிறது.

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகத் திகழும் எலான் மஸ்க்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முக்கியமானதாகத் திகழ்கிறது. 
இந்த நிறுவனம், விண்வெளி சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சமீபத்தில் யாருமே செய்யாத ஒரு புதிய சாதனையைச் செய்து காட்டிருக்கிறது. அதன் படி தான், விண்வெளி வீரர்கள் அல்லாத பொது மக்களில் 4 பேரை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்தது.

அதாவது, அமெரிக்காவில் இருந்து 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலாவாகச் சென்றனர். 

கடந்த 16 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.32 மணிக்கு ஃபால்கான் ராக்கெட்டுடன் பொருத்தப்பட்ட விண்கலத்துடன் அந்த 4 பேரும் வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்றனர். 

இப்படி பயணப்பட்ட இந்த 4 பேரும் மிகவும் சாதாரண மனிதர்கள் தான். இவர்களுடன் எந்த விண்வெளி வீரர்களும் உடன் செல்லவில்லை. ஆனாலும், விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தியில்லாத இடத்தில் எப்படி நடந்து கொள்வது, எப்படி பயணிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை கடந்த 9 மாதங்களாக அந்த 4 பேருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அளித்து வந்தது.

இந்த சுற்றுலாவில் ஷிப்ட் 4 பேமெண்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஜார்ட் ஐசக்மேன், 29 வயதான மருத்துவர் ஹேலே ஆர்சனாக்ஸ், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் அமெரிக்க விமானப்படை முன்னாள் வீரர் கிறிஸ் செம்ப்ரோஸ்கி, பேராசிரியர் சியான் ப்ராக்டர் ஆகிய 4 பேரும் தான் விண்வெளிக்கு சுற்றுலா சென்றவர்கள் ஆவர். 

அதன் படி, பூமியிலிருந்து மிகச் சரியாக 585 கிலோ மீட்டர் அப்பால் சென்ற அந்த 4 பேரும், அங்கிருந்தபடியே பூமிப்பந்தை கண்டு ரசித்து ஆச்சரியப்பட்டனர்.

இவற்றுடன், விண்வெளியில் நிகழும் புவி ஈர்ப்பு விசை மாறுபாட்டின் தாக்கத்தையும் அந்த 4 பேரும் அப்படியே உணர்ந்திருக்கிறார்கள்.

3 நாள் பயணமாக சென்ற அவர்கள், இந்த சுற்றுலாவை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, அமெரிக்காவின் ஃப்ளோரிடா அருகிலுள்ள அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக பாராசூட் மூலம் தரையிறங்கினார்கள். 

உற்சாகத்தில் துள்ளி திளைத்த அவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு, கரைக்கு திரும்பினார்கள். 

அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் தானும் தனது விருந்தினர்கள் 3 பேரும் என பெரும் தொகையைக் கட்டணமாகச் செலுத்தி விண்வெளி சுற்றுலா சென்றிருந்தார். அடுத்து வரும் மாதங்களில் மேலும் பல விண்வெளி சுற்றுலா பயணங்கள் நிகழ உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.