உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து ரஷியாவில் தன்னுடைய சேவைகளை சோனி மியூசிக் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 16-வது நாளாக நீடித்து வருகிறது.  இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன. அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன. 

அதனைத்தொடர்ந்து மேலும் பேஸ்புக், டுவிட்டர், டிக் டாக், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் ரஷியாவில் தன்னுடைய அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. 

மேலும் இது குறித்து கூறிய சோனி மியூசிக், நாங்கள் உக்ரைனில் வன்முறை முடிவுக்கு வரவும் அங்கு அமைதி பிறப்பதற்கும் அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் ரஷியாவில் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தி உக்ரைனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எங்களது உலகளாவிய மனிதாபிமான நிவராண முயற்சியை தொடர்வோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவை நிறுத்த காலத்திலும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்கிழமைய அன்று யுனிவர்சல் மியூசிக் குழுமம் ரஷியாவில் தங்களுடைய சேவைகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. 

அதனைத்தொடர்ந்து  வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் வருகிற நாட்களில் அதனுடைய செயல்பாடுகளை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த 'தி பேட்மேன்' திரைப்படத்தை ரஷியாவில் வெளியிடப்போவதில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.