பிலிப்பைன்ஸ் நாட்டை ராய் என்கிற சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டு விட்டது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை தற்போது 208 ஆக உயர்ந்துள்ளது.

Philippines

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ராய் என்கிற அதிக சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டுள்ளது. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளி காற்று சூழன்றடித்தது. இதனால் சமீபத்திய ஆண்டுகளில் பிலிப்பைன்சை தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த புயலாக இதை பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2 நாட்களாக வீசிய புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் பல காற்றில் அடித்து செல்லப்பட்டு கடலில் மூழ்கின.

மேலும் அந்த புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித் தீர்த்தது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதேபோல் புயல் காரணமாக 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் மின்வினியோகம் தடைபட்டு உள்ளது. தகவல் தொடர்பு சேவையும் முடங்கி உள்ளது. சியார்கோ, சூரிகாவோ ஆகிய பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மேலும் புயலை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின. இந்த புயல் காரணமாக சுமார் 8 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பலத்த மழை கொட்டியதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் ராய் புயல் காரணமாக தற்போது 208 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 52 பேர் மாயமாகி உள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

அதனைத்தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, கடலோர காவல் படை ஆகியவற்றை சேர்ந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர்.