கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையின், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

அன்றாட தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்ந்திருக்கிறது. காகிதம் இல்லாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூட நடத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்துள்ளது.

தீவு நாடான இலங்கையில் 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் பொருளாதாரம் முற்றிலுமாய் சீர்குலைந்தது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து, இறக்குமதிக்கும் வழியில்லாமல் போனது. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியானது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை.  இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.  இந்த நிலையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும். அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அறிவித்தார்.

மேலும் தொடர்ந்து  நேற்று மாலை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை  ரனில் விக்ரமசிங்கே சந்தித்து, பிரதமர் பொறுப்பை ஏற்பதாக கூறினார். இதையடுத்து அதிபர் முன்னிலையில் நாட்டின் 26-வது பிரதமராக  ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் 6-வது முறையாக அவர் பிரதமராக பதவி ஏற்று உள்ளார்.

இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளதாக கூறப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் இந்த பயணம் அமையலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.