உக்ரைனில் இருந்து தன்னை மீட்ட இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 14-வது நாளாக நீடித்து வருகிறது.  இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. 

மேலும் இதற்கிடையில், போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆஸ்மா ஷபிக்யூ என்ற பெண்ணை இந்தியா மீட்டுள்ளது. தன்னை மீட்டதற்கு உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தான் பெண் ஆஸ்மா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆஸ்மா கூறுகையில், வணக்கம் என் பெயர் ஆஸ்மா ஷபிக்யூ. நான் பாகிஸ்தானை சேர்ந்தவள். உக்ரைனில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் சிக்கித்தவித்த என்னை மீட்பதில் உதவிய கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்த்ற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை ஆதரித்ததற்கு நன்றி. இந்திய தூதரகத்தால் நான் நிச்சயம் பாதுகாப்பாக எனது வீட்டிற்கு செல்வேன் என எனக்கு நம்பிக்கை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.