அமெரிக்காவில், 6 வயது சிறுவனொருவன் ஜெர்மன் ஷெப்பர்டு நாயிடமிருந்து தன் சகோதரியைக் காப்பாற்றுவதற்காகப் பலமாக சண்டையிட்டிருந்த செய்தியொன்று, சமூக வலைதளங்கள்ல, கடந்த ஒரு வாரமாகவே வேகமா பகிரப்பட்டு வருகிறது. செம ட்ரெண்டாகிட்ட இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிறுவனின் வீரத்தைப் பாராட்டி, பிரபலங்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

இந்தப் பாராட்டுப் பட்டியல்ல, ஸ்பைடர் மேன், ஐரன் மேன், கேப்டன் அமெரிக்கா என மார்வெல் நடிகர்களெல்லாம் கூட, இருக்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்தது ஜூலை 9 -ம் தேதி, வயோமிங் என்ற பகுதியில். அந்தப்பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனும், அவனுடைய 4 வயது தங்கையும் நாயிடம் சிக்கி இருந்திருக்கிறார்கள். சிறுவன் பிரிட்ஜர் வாக்கர், தனது தங்கையைக் காப்பாற்ற எண்ணி, நாய்க்கு குறுக்கே புகுந்து போராடியிருக்கிறான். அவனுடைய முகத்தில் பல இடங்களில் காயம் ஏற்பட்ட போதும், கொஞ்சம் கூட பின்வாங்காமல், உறுதியாக நின்று தங்கையைக் காப்பாற்றியிருக்கிறான் சிறுவன்!.

இப்படி விடாமல் தொடர்ச்சியாகப் போராடிய காரணத்தினால், பிரிட்ஜருக்கு தற்போது 90 தையல்கள் போடப்பட்டிருக்கிறதாம். ``தேர்ந்த ப்ளாஸ்டிக் சர்ஜியான் ஒருவரின் இந்த மருத்துவ உதவிக்குப் பிறகு, பிரிட்ஜர் இப்போ முழு நேர ஓய்வில் இருக்கிறார்" எனச் சொல்லி அவனுடைய உறவினர் ஒருவர், தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுதான் வைரலாகிவிட்டது. 

``நாய் கடிக்க வந்தபோது, ஓடாமல் ஏன் குறுக்கே புகுந்து போராடினாய்?" என்று பிரிட்ஜரின் தந்தை கேட்டபோது, ``இருவரில் ஒருவர் இறக்க வேண்டும் என்றால் அது நானாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்" என்று கூறி சிலிர்க்க வைத்திருக்கிறான் பிரிட்ஜர்.

தன்னுடைய பதிவில் சிறுவனுக்கு சூப்பர் ஹீரோக்களை பிடிக்குமென அவருடைய அந்த உறவினர் குறிப்பிட்டதால், சூப்பர் ஹீரோக்களை டேக் செய்து, பதிவு ட்ரெண்டாக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் முதலும் முக்கியமுமாக கேப்டன் அமெரிக்காவின் க்ரிஸ் எவன்ஸ், பிரிட்ஜருக்கு வீடியோ வடிவில் வாழ்த்து சொல்லியிருக்கிறார். தன்னுடைய அந்த வாழ்த்தில் ``தன்னலமில்லாத உன்னை அண்ணனாக பெற்றதற்கு, உன் தங்கை அதிர்ஷ்டம் செய்திருக்கிறாள். எத்தனையோ பேர் உன்னை இதுவரை பாராட்டியிருப்பார்கள். ஒன்றுமட்டும் நியாபகம் வைத்துக்கொள், நீயொரு ஹீரோ. உன் பெற்றோர் உன்னை நினைத்து பெருமைப் படுவர்" என்று கூறியிருந்தார்.

`தி பிரிண்ஸஸ் டைரீஸ்' தொடரில் நடித்த அன்னே ஹாத்வேவின் பார்வையையும், சிறுவன் பிரிட்ஜர் பெற்றிருக்கிறான். அவர் சிறுவனிடம் பேசியபோது, ``நான் அவெஞ்சர் இல்லை. ஆனால், உன்னைப் போல ஒரு ஹீரோவை பார்த்தவள் நான். உன்னுடைய தைரியத்தில், பாதியாவது எனக்கு இருக்க வேண்டும் என நான் விருப்பப்படுகிறேன். உனக்கு எப்போதும் வெற்றிகள் வந்துசேரட்டும் பிரிட்ஜர்!" என்று கூறியிருந்தார்.

இவரைத் தொடர்ந்து, அமெரிக்க நடிகர் மார்க் ரஃபெல்லோ சிறுவனை பாராட்டியிருக்கிறார். அவர் பேசும்போது, ``பிரிட்ஜரின் தைரியத்தையும், அவனின் போராடும் மனதையும் நான் பெரிதும் மதிக்கிறேன். பிறரின் நலனுக்காக தங்களை முன்னிறுத்திக் கொண்டு போராடுபவர்கள், எல்லா ஹீரோக்களையும் விட பெரியவர்கள். பிரிட்ஜர், அப்படியானவொரு ஹீரோ. சரியான பாதை, எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை மேற்கொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு இருந்தால், அவர்தான் மிகப்பெரிய தைரியசாலி" எனக்கூறியுள்ளார்.

விஷயம் ட்ரெண்டாகி ஒரு வாரம் ஆகியிருக்கும் சூழலில், நேற்றைய தினம் ஸ்பைடர் மேனும் சிறுவனை வீடியோ காலில் தொடர்புகொண்டு நேரடியாகப் பாராட்டியிருக்கிறார். ஸ்பைடர் மேன் டாம் ஹாலண்ட் பேசும்போது, ``உன்னுடைய கதையைக் கேட்டறிந்தேன் பிரிட்ஜர். மிகவும் தைரியசாலியான உன்னை நினைத்து, நான் மிகவும் பெருமைப்படுகிறேன் பிரிட்ஜர். நான் அடுத்து ஸ்பைடர் மேன் - 3 திரைப்படம் நடிக்கவிருக்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் ஸ்பைடர் மேன் - 3 படப்பிடிப்பு தளத்துக்கு வரலாம். நீ என்னுடைய சிறப்பு விருந்தினர்!" எனக்கூறியிருக்கிறார்.

இந்த ட்ரெண்டிங் வீடியோவில் சம்பந்தப்பட்ட, ஜெர்மன் ஷெப்பர்டு நாயின் உரிமையாளர்கள் பிரிட்ஜரின் குடும்பத்தினரிடம் தங்களின் மன்னிப்பைத் தெரிவித்துள்ளார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பின், அவர்களும் பிரிட்ஜரின் குடும்பத்தினரும் நல்ல நண்பர்களாக ஆகியிருப்பதாக, பதிவை முதன்முதலில் வெளியிட்ட பிரிட்ஜரின் உறவினர் தன்னுடைய அடுத்தடுத்த பதிவில் கூறியிருக்கிறார்!

இந்த பாசக்கார சூப்பர் ஹீரோ அண்ணனுக்கு, உங்க வாழ்த்தையும் இங்கே சொல்லி சந்தோஷப்படுங்க!

 

- ஜெ.நிவேதா