தனது மனைவி, வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டதை, சோசியல் மீடியாவில் வீடியோவாக பார்த்த கணவன் கடும் அதிர்ச்சியடைந்தார்.

சீனாவில் தான் இப்படி ஒரு திருமண மோசடி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சீனாவின் இன்னர் மங்கோலியாவில் உள்ள பையன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான யின் செங். இவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் பல வருடங்களாக முயற்சி செய்து வந்தனர். ஆனாலும், சீனாவில் திருமணத்துக்குப் பெண் கிடைப்பது என்பது தற்போது அங்கு குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. அங்கு திருமணத்திற்குப் பெண் கிடைப்பது மிகவும் சிரமமான ஒரு வசியமாக இருந்து வருகிறது.

எனினும், தனது மகனுக்குப் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் பெண் தேடியும் எங்கும் பெண் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது மகனுக்குத் திருமண வரன் பார்க்கும் லீ என்பவரின் உதவியை, யிங் செங்கின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

அதற்கு அவரோ, ஏற்கனவே திருமணமாகி கணவனைப் பிரிந்த பெண் ஒருவர் இருப்பதாக  அவர் கூறியிருக்கிறார். 

இதனைக் கேட்ட யின் செங்கின் பெற்றோர், “எப்படியாவது தங்களது மகனுக்குத் திருமணம் நடைபெற்றால் போதும்” என்று, முடிவுக்கு வந்து அந்த பெண்ணிற்குச் சம்மதம் சொல்லிவிட்டனர். அப்போது, மணமகன் யின் செங்கும் இதற்குச் சரி என்று சொல்லிவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, நானா என்ற பெண்ணை, தரகர் லீ அறிமுகம் செய்து வைத்துள்ளார். 

அப்போது, மணமகனுக்கும் அவரது பெற்றோருக்கும் நானைவை பிடித்து விட்டதால், உடனடியாக தனது ஊருக்கு வரும் படி, தொலைப்பேசியில் கூறி, பயண செலவுக்காக மணப்பெண் நானாவுக்கு சீன மதிப்பில் ஆயிரம் யென் காசுகளை, மணமகன் யின் செங் அனுப்பி வைத்து உள்ளார். 

அதன் படியே, மணமகள் நானாவும் குறிப்பிட்ட அந்த ஊருக்கு வந்துள்ளார். மணமகளைப் பார்த்த யின் செங்கின் தந்தை, அவரது பெற்றோரைச் சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால், மணமகளின் ஊரில் “பாலம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், மணப்பெண்ணின் பெற்றோரை இப்போது பார்க்க முடியாது” என்று, தரகர் லீ கூறியுள்ளார். 

அத்துடன், “பாலம் கட்டும் நிறுவனம் நிலங்களுக்கு குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு வழங்கிக்கொண்டு இருப்பதாகவும், திருமணம்
செய்துகொண்டால் இழப்பீடு பெற முடியாது” என்றும், அவர் புது கதை ஒன்றையும் கூறி, மணமகன் வீட்டாரையும் நம்ப வைத்திருக்கிறார்.

இதனை ஏற்றுக்கொண்ட மணமகன் வீட்டார், தனது மகன் யின் செங் மற்றும் மணப்பெண் நானாவுக்கு மிகவும் எளிய முறையில் திருமணத்தை நடித்து வைத்தனர். திருமணமும் முடிந்தது. 

மணப்பெண் நானாவுக்கு வரதட்சணையாக இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிகிறது. 

திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களில் தனது பெற்றோரைப் பார்ப்பதற்காகச் சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறி அங்கிருந்து மணப்பெண் நானா, அதன் பிறகு அந்த ஊருக்கு திரும்பிச் செல்லவில்லை. அத்துடன், கணவன் யின் செங்கின் போனையும் அவர் எடுக்கவில்லை.

இதனால், சற்று விரக்தி அடைந்த அந்த கணவன் யின் செங், சமூக வலைத்தளங்களில் தனது பொழுதை போக்கிக்கொண்டு இருந்தார். 

அந்த நேரம் பார்த்து, சீனாவில் உள்ள ஜிக்சியாவோ டவுனில் நடைபெற்ற திருமணம் ஒன்றின் வீடியோவை அவர் தனது செல்போனில் பார்த்து உள்ளார்.

அந்த வீடியோவில், மணப்பெண் தனது மனைவிபோல் இருப்பதால், அதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த யின் செங், இது குறித்து அவரே தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறார். 

அத்துடன், அவர் அங்குள்ள ஜிக்சியாவோவுக்கு நேரடியாகச் சென்று விசாரித்து உள்ளார். அந்த விசாரணையில், வீடியோவில் இருப்பது தன் மனைவி நானா தான் என்பதையும் அவர் உறுதி செய்தார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினார்கள். அதன் படி, மனைவி நானாவும், தரகர் லீயும் இணைந்து திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களைக் குறிவைத்து மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை அந்நாட்டு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து இந்திய மதிப்பில் இரண்டரை கோடி ரூபாய் வரை, மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும், அந்நாட்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.