லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக கிடங்கில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஆகஸ்ட் 4-ம் தேதி, இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் வெடித்துச் சிதறியது. இந்தப் பெரும் வெடி விபத்தால், அந்த துறைமுக கிடங்கை ஒட்டிய 20 கிலோ மீட்டர் தூரம் வரை கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் உயிரிந்தோர் எண்ணிக்கை 160 என்றிருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்களன்றி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சுமார் 3 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

உலக நாடுகளை நடுங்கச் செய்த இந்த வெடி விபத்து, மாபெரும் துயரச் சம்பவமாக பார்க்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்த போது, முறையான அனுமதியின்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டதே வெடி விபத்துக்கு காரணம் என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

கொரோனா ஊரடங்கு லெபனான் முழுவதும் அமலில் இருக்கும் நிலையில், அரசின் அலட்சியமே இந்த கோரச் சம்பவத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டி மக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். வீதிகளில் வந்த மக்கள், `அரசு ராஜினாமா செய்யவேண்டும்' என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். மேலும் பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மக்கள் போராட்டம் வலுப்பெற்றதைத் தொடர்ந்து லெபனான் அமைச்சரவையிலிருந்து ஒவ்வொரு அமைச்சராக ராஜினாமா செய்யத் தொடங்கினர். நீதித்துறை அமைச்சர் மரியா கிளாடி நஜிம், பொருளாதாரத் துறை அமைச்சர் காசி வஸ்னி, தகவல் துறை அமைச்சர் மானல் அப்தெல், சுற்றுச்சூழல் மற்றும் நிர்வாக துறை அமைச்சர் டாமினஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிய லெபனான் அரசு, அந்நாட்டு தலைமை அதிகாரிகள் மற்றும் அமைச்சரவையை ஒன்று கூட்டி கூட்டம் நடத்தியது. கூட்டத்திற்கு தலைமைத் தாங்கிய பிரதமர் ஹசன் டியாப், தவறுக்கு பொறுப்பேற்று, தானும் மொத்தமாக பதவி விலகுவதென முடிவு செய்தார்.

இதனையடுத்து அந்நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் ஹசன் டியாப், தனது தலைமையிலான லெபனான் அரசு மொத்தமாக பதவி விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு கிடைந்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டு, தற்போது போராட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும், பிரதமர் ஹசனின் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நிறைய பிரச்னைகள் இருந்ததாகவும், அதில் ஒரு பகுதிதான் இந்த வெடிவிபத்து என்று சிலர் குற்றம் சொல்லிவருகின்றனர். இதுபற்றி கூறும்போது, `லெபனான் நாட்டின் சில பகுதிகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, ஊழல், நிர்வாகக் குறைபாடு போன்றவை தொடர்ந்து மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இதற்கு நடுவேதான், பெய்ரூட்டில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது' என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் லெபனான் பிரதமராக பதவிக்கு வந்தார் ஹசன் தியாப். ஆட்சி மாறியதே தவிர காட்சி மாறவில்லை என்பதுதான் லெபனான் நிலவரம். 2018ம் ஆண்டு லெபனான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. சாத் ஹரிரி பிரதமராக பதவி வகித்தார். அப்போதும் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக மக்கள் வெடித்துக் கிளம்பினர். எனவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அவர் பதவி விலகினார். பின்னர் கடந்த ஜனவரியில் ஹசன் தியாப் பதவியேற்றார். பெய்ரூட்டின் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால், நிலைமையை சீரமைக்க அவருக்கும் தெரியவில்லை. விளைவு, இப்போது அவரும் பதவி விலகியுள்ளார்