கொரோனா முகாமின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்து, இளம் பெண் குளிக்கும் போது வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன. வெளியே தான், இப்படியான குற்றச் சம்பவங்கள் நடக்கிறது என்றால், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் முகாம்களில் இருப்பவர்களுக்கும் இது போன்ற பாலியல் தொல்லைகள் அரங்கேறுவது அனைவரையும் கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கடந்த மாதம், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பணியாற்றி வந்த 27 வயதான ஆண் உதவியாளர் ஒருவர், கொரோனா தனிமை மையத்தில் இருந்த இளம் பெண்ணை, அந்த பெண்ணின் குழந்தையின் முன்பே மிரட்டியே 3 நாட்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவமும் நடைபெற்றது.

அதேபோல், சீசனுக்கு தகுந்தார் போல் யோசித்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் “கொரோனாவால் நான் சாகப்போகிறேன்” என்று மனைவியிடம் செல்போனில் தகவல் கூறிவிட்டு, வீட்டை விட்டு ஓடி மாநிலம் விட்டு மாநிலம் சென்று கள்ளக் காதலியோடு குடும்பம் நடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முக்கியமாக, “இந்த கொரோனா காலத்தில் நாடு முழுவதும் 13,244 பாலியல் பலாத்கார புகார்கள் பதிவாகி உள்ளதாகவும்” மத்திய அரசு கடந்த வாரம் அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டது. 

இந்நிலையில், இந்த பாலியல் பலாத்கார புள்ளி விபரங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தான், கேரளா மாநிலத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தனிமை முகாமின் குளியலறையில் ரகசிய கேமரா வைத்து, இளம் பெண் குளிக்கும் போது வீடியோ எடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

கேரளா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்குள்ள பல்வேறு கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. அப்படிதான், தமிழக - கேரள எல்லைப் பகுதியான பாறசாலையில் ஸ்ரீ கிருஷ்ணா பார்மசி கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் கேரளா மாநிலம் செங்கல் பகுதியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் 25 வயதான ஷாலு, கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அதே சிகிச்சை மையத்தில் பாறசாலை அருகே உள்ள 20 வயது இளம் பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதே மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அந்த 20 வயது இளம் பெண், அங்குள்ள ஒரு குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்த போது, அங்கு ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த செல்போனை எடுத்து பார்த்த போது, அதில் தான் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்ததைக் கண்டு, இன்னம் அதிர்ச்சியடைந்து உள்ளார். 

இதனையடுத்து, பயந்து நடுங்கிய அந்த இளம் பெண், அந்த செல்போனை எடுத்து மருத்துவமனையில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து, புகார் அளித்தார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் போலீசாருக்க தகவல் தெரிவிக்கப்பட்டன. அதன்படி, அங்கு விரைந்து வந்த போலீசார், செல்போனை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த செல்போன் அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஷாலுவின் செல்போன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரிடம் போலீசார் விசாரித்து உள்ளனர். அப்போது, “இளம் பெண் குளிக்கும் போது, தன்னுடைய செல்போனை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்ததை” அவர் ஒப்புக்கொண்டார். 

அதன் தொடர்ச்சியாக, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 108 ஆம்புலன்சில் வைத்து கொரோனா பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சர்ச்சைகள் மறைவதற்குள் மீண்டும் அதுபோன்ற ஒரு புதிய சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.