அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தல், கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக  வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டார். அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற பின்பு, அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடனுக்கு எதிராக கலவரங்களையும் போராட்டங்களையும் செய்தனர்.

டொனால்ட் டிரம்பும் தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர், ஒரு வழியாக தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றினார்.
இந்நிலையில், சமீபத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் ஒன்று வந்ததாக செய்தி வெளியானதையடுத்து, ஃப்ளோரிடாவை சேர்ந்த நிவியன் பெடிட் பெல்ப்ஸ் என்ற செவிலியர் கொலை மிரட்டல் விடுத்ததாக அமெரிக்க சீக்ரட் சர்வீஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


சிறையில் தனது கணவருக்கு பெல்ப்ஸ் வீடியோக்களை அனுப்பி உள்ளார். அந்த வீடியோகளை காவல்துறை கைப்பற்றியுள்ளது. அந்த வீடியோக்களில், அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் மீது வெறுப்பை உண்டாகும் வகையில் பேசியதாக கூறப்படுக்கிறது. 


பிப்ரவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதிக்குள் கமலா ஹாரிஸை கொலை செய்யவும், உடல் ரீதியாக தாக்குதல் நடத்த நிவியன் பெடிட் பெல்ப்ஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக ஃப்ளோரிடா நீதிமன்றத்தில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.