கொரோனாவை வெல்ல கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

corono

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் உலக பொருளாதார மன்றத்தின் ஒரு வார கால ஆன்லைன் தாவோஸ் செயல்திட்ட உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இதன் முதல் நாளான நேற்று சீன அதிபர் ஜின்பிங் காணொலி காட்சி மூலம் சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் கொரோனாவை வெல்லும் வழி மற்றும் தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொரோனா தொற்றால் ஒரு நூற்றாண்டில் பார்த்திராத பெரிய மாற்றங்களுக்கு உலகம் தள்ளப்பட்டு இருக்கிறது. தொற்றுநோயை முறியடிப்பது மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது உலகெங்கிலும் உள்ள மக்களின் பொதுவான கவலையாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் இந்த பெருந்தொற்றில் இருந்து மனித குலம் நிச்சயம் மீண்டுவரும். கொரோனாவை வெல்வதற்கு கூட்டு முயற்சிகள்தான் ஒரே வழி. சர்வதேச அளவில் நியாயமான தடுப்பூசி வினியோகம் மற்றும் தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்துவதும் பெருந்தொற்றில் இருந்து விரைவாக விடுபட வழிவகுக்கும். இதைப்போல உலக பொருளாதார நடவடிக்கைகளையும் திறந்து, மிகப்பெரிய ஒத்துழைப்பை அனைத்து நாடுகளும் வழங்க வேண்டும். நாம் சுவர்களை எழுப்பாமல், தடைகளை நிச்சயம் அகற்ற வேண்டும். மேலும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல வளரும் நாடுகள் மீண்டும் வறுமைக்கு தள்ளப்பட்டு உள்ளன. சில வளர்ந்த நாடுகள் கூட கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. வளர்ந்த நாடுகளுக்கு பொறுப்பான பொருளாதார கொள்கைகள் தேவை. வளரும் நாடுகளின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு கொள்கைகளின் பரவல் விளைவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

இதனைத்தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து விரிவுபடுத்தும். அத்துடன் பொருளாதாரம் மற்றும் சந்தை சீர்திருத்தங்களுக்கும் சீனா உறுதிபூண்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச விதிகள் தேவை. மேலும் உலக அளவில் இதுகுறித்த தகவல் பரிமாற்றங்களும் வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.