உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

மேலும் உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த சூழலில் தற்போது ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து 10 நாட்கள் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன. ரஷ்யாவின் சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், உக்ரைன் எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க மக்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளார். மேலும் அமெரிக்க மற்றும் ரஷ்ய படைகள் சண்டையிடும் போது  ஒருவரையொருவர் தாக்கி கொண்டால் ரஷ்யாவுடன் பெரும் மோதலை ஏற்படுத்த கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து அமெரிக்கர்கள் இப்போதே வெளியேறுவது நல்லது என்று பைடன் என்பிசி செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய படைகளில் ஒன்றை நாங்கள் கையாள்கிறோம். இது மிகவும் வித்தியாசமான சூழ்நிலை என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையே எல்லை பதற்றம் நிலவி வரும் நிலையில் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.