ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சான், சீனாவின் ஆளுங்கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பம் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுக்கு தற்போது 67 வயதாகிறது. நடிகர் ஜாக்கி சான், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார்.

ஆனால், இந்த ஹாங்காங்கில் சீனா ஆதிக்கம் செலுத்தும் விதமாக, அந்நாட்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, ஹாங்காங் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஜாக்கி சான், சமீப காலமாக சீனாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறார். 

அத்துடன், ஹாங்காங்கில் கடந்த ஆண்டு போராட்டம் நடைபெற்றபோது கூட, நடிகர் ஜாக்கி சான் சீன அரசுக்கு ஆதரவான தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். இதனால், அந்நாட்டு மக்கள் ஜாக்கி சான் மீது மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். 

இந்த நிலையில், சீன திரைப்பட சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வரும் ஜாக்கி சான், பீஜிங்கில் நேற்று நடந்த திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது பேசிய அவர், “கடந்த சில ஆண்டுகளில் சீனா, மிக வேகமாக முன்னேறி வருகிறது என்றும், இதை பல நாடுகளுக்குச் செல்லும் போது நான் நேரடியாகவே உணர்ந்திருக்கிறேன் என்றும்” என்றும், குறிப்பிட்டார்.  

அத்துடன், “சீன குடிமகனாக இருப்பதில் பெருமை அடைகிறேன் என்றும், 5 நட்சத்திரங்களை உடைய நம் சிவப்பு கொடிக்கு, உலகம் முழுதும் மரியாதை இருக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், “சீன கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை மிக குறைந்த காலத்திலேயே நிறைவேற்றி வருகிறது என்றும், அக்கட்சியில் உறுப்பினராக இணைய நான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன்” ஜாக்கி சான் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 100 ஆண்டு காலம் ஆவதையொட்டி, அங்கு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், சீன கம்யூனிஸ்ட் கட்சி திரைப்படத் துறையின் முக்கிய நடிகர்கள் உட்பட பலரையும் அழைத்து விழாவினை சிறப்பித்து வருகின்றனர். 

குறிப்பாக, “ஹாங்காங்கும், சீனாவும் எனது தாய் வீடு என்றும், சீனா என் நாடு என்றும், நான் என் நாட்டை நேசிக்கிறேன், என் தாய் நாட்டை நேசிக்கிறேன்” என்றும், ஜாக்கி சான் பேசினார். 

முக்கியமாக, “ஹாங்காங்கில் விரைவில் அமைதி திரும்பும் என்று, நான் நம்புகிறேன்” என்றும், ஜாக்கி சான் கூறினார்.