“போருக்கு தயாராக இருங்கள்” என்று, ராணுவத்தினரை உஷார் படுத்திய சீன அதிபர் ஜின்பிங் பேச்சால், அந்த எச்சரிக்கை இந்தியாவுக்கு எதிராகவா? அல்லது ஜப்பானுக்கு எதிராகவா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா - சீனா எல்லையான லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல், சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால், அப்போது முதல் தற்போது வரை தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் தேதி நடந்த மோதலின் போது, இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீனா ராணுவம் தரப்பிலும் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சீனா தனது ராணுவத்தை அங்குக் குவித்த நிலையில், இந்தியாவும் தனது பங்கிற்கு ராணுவத்தை வழக்கத்தை விட அதிக அளவில் அங்குக் குவித்ததால், எல்லையில் போர் மேகங்கள் அவ்வப்போது சூழ்ந்து காணப்படுகின்றன. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனாவின் குவங்டாங் நகரில் உள்ள ராணுவ தளம் சென்ற அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், வீரர்கள் மத்தியில் வீர உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், ஷசீன வீரர்கள் மனதையும் சக்தியையும் போருக்குத் தயார் படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.

அத்துடன், “வீரர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும் அதிபர் ஜி ஜின்பிங் வீரர்களை எச்சரிக்கை படுத்தி உள்ளார்.

“லடாக் எல்லை விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே பதற்றம் தணியாத சூழ்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இவ்வாறு பேசி உள்ளதால், அது இந்தியாவுக்கு எதிராக வீரர்களைத் தயாராக இருக்கச் சொன்னாரா?” என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

மேலும், தென் சீனக் கடல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அண்டை நாடுகளுடன் மோதலை சீனா கையாண்டு வரும் நிலையில், ஜி ஜின்பிங் இவ்வாறு பேசியுள்ளதையும், ஒட்டு மொத்த உலக அரங்கில் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. 

அதே நேரத்தில், ஜப்பான் தீவுக்குள் அத்துமீறி சீன கப்பல்கள் நுழைந்து உள்ளதற்கு, ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 

தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், அந்த தீவுகள் எல்லாம் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில், சீனாவுக்கும் மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, கிழக்கு சீனக்கடலில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் உள்ள சென்ககு தீவையும் சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன கடலோர காவல் படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் சர்ச்சைக்குரிய சென்ககு தீவுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளன. இதற்கு, ஜப்பான் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும், சீனாவின் 2 கப்பல்களும் இன்னமும் அங்கேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சீனாவுக்கு ஜப்பான் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து உள்ளது. 

இதனால், “போருக்குத் தயாராக இருங்கள்” என்று, சீன அதிபர் ஜின்பிங் ராணுவத்தினரை உஷார் படுத்தியது எந்த நாட்டுக்கு எதிராக என்று கேள்வியும், கருத்துக்களும் உலக அளவில் பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.