பாகிஸ்தானில் பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் கடைசி வரை அடம் பிடித்து நின்ற இம்ரான் கான், கடைசி நேர பரபரப்புக்கு மத்தியில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின் முதல் பிரதமர் என்ற அவப்பெயரையும் பெற்று உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், நேற்றைய தினம் நள்ளிரவு நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்ல தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில், இம்ரான் கான் தலைமையிலான அரசு அப்படியே கவிழ்ந்துபோனது. 

இதனால், புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பாா் என்று, அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதாவது, பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, நம்பிக்கையில்லா தீா்மானத்தை கொண்டு வந்தன.

இந்தத் நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான விவாதத்துக்காக நாடாளுமன்ற கீழவை கூடிய நிலையில், இந்த அவையை வழி நடத்திய அவை துணைத் தலைவா் காசிம் சுரி, “இந்த நம்பிக்கையில்லா தீா்மானம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது” என்று கூறி, அதை நிராகரிப்பதாக கூறினார்.

இதனைத் தொடா்ந்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் ஆரிஃப் ஆல்வி அதிரடியாக அறிவித்தாா். 

இந்த விசயத்தை தானாகவே முன்வந்து விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் தலைமையிலான 5 போ் கொண்ட அமா்வு, “இந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவையின் துணைத் தலைவா் நிராகரித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும், பிரதமரின் பரிந்துரைப்படி நாடாளுமன்றத்தை அதிபா் கலைத்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு மிகவும் எதிரானது” என்றும், அதிரடியாகவே தீா்ப்பளித்தனர்.

அத்துடன், “பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையை சனிக் கிழமை கூட்டி நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றும், உத்தரவிட்டது. 

அந்த வகையில், “நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்காக, பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக் கிழமை காலை கூடிய நிலையில், அவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவரப்பட்டது. 

இது குறித்து, பாகிஸ்தான் எதிா்க் கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப், “உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவையை அவைத் தலைவா் நடத்துவாா் என்று நம்புகிறேன்” என்று, கூறுனார்.

இதனால், அந்த அவையில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் அமலியில் ஈடுபட்ட நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர், இது குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்களும், ஆளும் கட்சி உறுப்பினா்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், அவை மீண்டும் கூடுவது தொடா்ந்து தாமதமாகி வந்தது. 

இந்த நிலையில் தான், இஃப்தாா் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை நாடாளுமன்ற தலைவா் இரவு 7.30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டாா். 

இந்த நோன்பு திறப்புக்குப் பிறகு அவை மீண்டும் கூடிய நிலையில், கடும் அமளியால் உடனடியாக இரவு 9.30 மணி வரை அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், இரவுத் தொழுகைக்கு பிறகு அவை மீண்டும் அவை கூடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமா் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இரவில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், “பிரதமா் பதவியை இம்ரான் கான் ராஜிநாமா செய்ய மாட்டாா்” என்று, முடிவெடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடிய நிலையில், அவைத் தலைவா் ஆசாத் கைஸரும், துணைத் தலைவா் காசிம் சுரியும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனா்.

இதையடுத்து, எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சோ்ந்த அயாஷ் சாதிக், அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பு நடவடிக்கைகளை நடத்தினார். 

அதன் தொடர்ச்சியாக, 342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்கிற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்ததாக தற்காலிக அவைத் தலைவா் அறிவித்தாா். 

இதனையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு அப்படியே கவிழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் நியமிக்கப்படுவாா் என்று, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, “நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தானின் முதல் பிரதமர் என்ற பெயரை இம்ரான் கான் பெற்றுள்ளது” குறிப்பிடத்தக்கது.