கணவன் தனது மனைவியை கண்டிக்க லேசாக நாளு தட்டு தட்டி, வழிக்கு கொண்டு வருவதில் எவ்வித தவறும் இல்லை என மலேசியாவைச் சேர்ந்த பெண் அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

malaysian minister

பாலின பேத காலத்தில் இதுவரையிலும் ஆண், பெண் சமத்துவம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக பெண்களை அடிமை போல் பாவிக்கும் மனநிலை வீட்டில் மட்டுமல்ல அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்ணியவாதிகளும், சமூகப் போராளிகளும் பெண்களின் சம உரிமைக்காகப் போராட தங்களால் இயன்றவரை முயற்சிக்கும் எடுத்து வரும் அதே சமயத்தில் மலேசியாவைச் சேர்ந்த பெண் அமைச்சர் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் விதமாக பேசியுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான துணை அமைச்சராக இருக்கும் சித்தி ஜைலா முகமது யூசாஃப் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அம்மாவின் குறிப்புகள்’ என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கணவன் தனது மனைவிகளைக் கண்டிக்க பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி, அவர்கள் கேட்கவில்லை என்றால், அவர்கள் மூன்று நாட்கள் தனித்தனியாக தூங்க வேண்டும் என்றும், பெண் பிடிவாதத்துடன் இருந்தால் லேசாக அடித்து கூட அவர்களது நடத்தையை மாற்றலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் பெண்கள் தங்களது கணவர்கள் சாப்பிடும் போதும், பிரார்த்தனை செய்யும் போதும், ஏன் அவர்களிடம் பேசுவதற்கு முன்பு கூட நிதானமாக இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதற்கு எல்லாம் மேலாக கணவனிடம் பேச விரும்பினால் மனைவி முதலில் அதற்கு அனுமதி பெற வேண்டும் என மிகவும் பழமைவாத பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் சித்தி ஜைலா முகமது யூசாஃப்பின் இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தனது பேச்சுக்கு பொறுப்பேற்று அமைச்சர் சித்தி ஜைலா முகமது யூசாஃப் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் செய்தி அறிக்கைகளின்படி, பெண்களின் உரிமைகள் குழுவான பாலின சமத்துவத்திற்கான கூட்டு நடவடிக்கை குழு, “அமைச்சரின் இந்த பேச்சு மலேசியாவில் குடும்ப வன்முறைக்கு சாதகமானதாக இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது. குடும்ப வன்முறை குறித்து புகார் அளிப்பது ஏற்கனவே கடினமாக இருந்து வரும் நிலையில், பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற கருத்து தெரிவிப்பது பிரச்சனைகளை மேலும் மோசமாக்குவதாகவும், பெண் அமைச்சர் கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய ஒரு அமைச்சர் என்ற பொறுப்பில்லாமல், இப்படி வெறுக்கத்தக்க, பெண்களின் சம உரிமை மற்றும் கண்ணியத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளது முற்றிலும் தவறானது மற்றும் தோல்வியுற்ற தலைமைக்கான உதாரணம் என மகளிர் அமைப்புகள் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றன.