அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வீட்டின் வெளியே துப்பாக்கியுடன் ஒருவர் நின்றிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட 56 வயதான கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார். இவரது வீடு, வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள தி நேவல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்திருக்கிறது. இது, கடற்படை கண்காணிப்பு இல்லம் என்றும், அழைக்கப்படுகிறது.

இந்த இல்லத்தில் தற்போது புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசிக்காமல், அமெரிக்க ஜனாதிபதியின் மாளிகையான வெள்ளை மாளிகையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிளேயர் மாளிகையில் தனது கணவர் டக்ளஸ் எம்.ஹாப் மற்றும் தனது குழந்தைகளுடன் அவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், துணை ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான கடற்படை கண்காணிப்பு இல்லத்தின் வெளியே நேற்று முன் தினம் ஒரு நபர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்து உள்ளார். இந்த தகவல், போலீசாரிக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, அமெரிக்க ரகசிய சேவை போலீஸ் படையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று, அந்த நபரை சுற்றி வளைத்து, அதிரடியாகக் கைது செய்தனர். அதன் பிறகு, அந்த நபரை வாஷிங்டன் பெருநகர போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக, அந்த நபரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இவர்களுடன், உளவுத்துறை அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த தீவிர விசாரணைக்குப் பிறகு, அந்த மர்ம நபர் யார் என்பது தெரிய வந்து உள்ளது. அந்த நபர், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆன்டனியோ நகரைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் பால் முர்ரே என்பதும், அவருக்கு 31 வயது ஆவதும் தெரிய வந்திருக்கிறது. 

அத்துடன், அந்த நபர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், அவர் வைத்திருந்த துப்பி பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவர் பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்களும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 

இதனால், அந்த நபர் மீது ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்வது, பயமுறுத்தும் வகையில் துப்பாக்கியை எடுத்துச் செல்வது, பதிவு செய்யப்படாத வெடிமருந்துகளை வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, கைது செய்யப்பட்ட பால் முர்ரே, கமலா ஹாரிசை குறி வைக்கிறாரா என்கிற கேள்வியும் தற்போது எழுந்து உள்ளது. இதனையொட்டி, அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே, “அவர் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை குறிவைத்து அங்கு வந்தாரா?” என்பது குறித்து  முழுமையாகத் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. இதனால்,  எனினும், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இல்லத்துக்கு வெளியே துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது,  அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.