ஒரு வீட்டிற்குள் “டமால் டுமீல் என்று துப்பாக்கி சத்தம்” கேட்டதால், அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, கடும் அதிர்ச்சி அடைந்தனர். கடைசி வரை சிரிக்காமல் சீரியசா படிங்க.

ஜெர்மனி நாட்டில் ஓடும் ரைன் நதிக்கரையில் அமைந்திருக்கும் கொலோன் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 26 ஆம் தேதி காலை 7.30 மணி அளவில் திடீரென்று டமால் டுமீல் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒரு வீட்டில் இருந்து கேட்டுள்ளது. 

இந்த சத்தத்தைக் கேட்டும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் வீடுகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி, அந்த வீட்டிற்குள் தீவிரவாதிகள் யாரும் உள்ள புகுந்து விட்டார்களோ என்றும், அவர்களுக்குள் அங்கு சண்டை நடக்கிறதா என்றும், பதறிப்போய் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அங்கு துப்பாக்கி ஏந்திய 10 க்கும் மேற்பட்ட போலீசார் வந்துள்ளனர். போலீசார் வந்த பிறகும், அந்த வீட்டில் இருந்து இயந்திரத் துப்பாக்கிகள் சுடும் சத்தம் கேட்டுள்ளது. வெகு நேரமாக அந்த துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால், நிலைமை மோசடைந்துள்ளதாக உணர்ந்த போலீசார், அந்நாட்டின் கமாண்டோ படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மேலும் பல துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை போலீசார் அங்கு விரைந்து வந்துள்ளனர்.

அதன்படி, உடனடியாக அங்கு நின்று திட்டமிட்ட போலீசார், அருகில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டடத்தில் ஏறி நின்று தாக்குதல் நடத்தத் தயாரானார்கள். இதனால், அந்நாட்டின் கலாச்சார மையமாகத் திகழும் கொலோன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல், அந்நாட்டின் ஊடகங்களில் பிரேக்கிங் செய்தியாக நேரலையில் ஒளிபரப்பும் செய்யப்பட்டு வந்தது.

இதனால், அந்நாட்டில் பெரும் பரபரப்பன ஒரு சூழல் ஏற்பட்டது. இதனால், அங்கு மிகப் பெரிய அசம்பாவிதம் நடக்கப் போவதாக அனைவரும் உணர்ந்தனர்.

அத்துடன், போலீசார் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தும் கூட அந்த துப்பாக்கி சுடும் சத்தம் மட்டும் நிற்கவில்லை. விட்டு விட்டு சத்தம் கேட்டுள்ளது. இதனால், அந்த வீட்டின் வெளியே நின்றவர்கள் மேலும் மேலும் பீதியடைந்தனர்.

ஒரு மிகப் பெரிய முயற்சிக்குப் பிறகு அந்த பகுதியைச் சேர்ந்த பூட்டுத் தொழிலாளி ஒருவரின் உதவியுடன் அந்த வீட்டிற்குக் கள்ளச் சாவி ஒன்றைத் தயாரித்து நைசாக வீட்டின் பூட்டை திறந்துகொண்டும், உடைத்துக்கொண்டும் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். உள்ளே சென்ற போலீசார், அத்துணை பேரும் அப்படியே எந்த ஆக்ஸன் சண்டையிலும் இறங்காமல் அப்படியே அதிர்ச்சியில் நின்றுள்ளனர்.  

அதற்குக் காரணம், அந்த வீட்டில் டி.டி.எஸ். எஃப்பெக்டில் அந்த வீட்டில் பெரிய டி.வி.யில் ஒரு அருமையான ஆக்ஸன் படம் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது. டி.வி.யில் அதிகம் சத்தம் வைக்கப்பட்ட இருந்ததால், அந்த டி.டி.எஸ். எஃப்பெக்டில் அது வேறுமாதிரியாக வெளியே கேட்டுள்ளது. குறிப்பாக, டி.வி. ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், அந்த டி.வி.யின் முன்பு உள்ள ஒரு சோபாவில் அந்த வீட்டின் உரிமையாளர் குறட்டை விட்டு ஜாலியாக தூங்கிக் கொண்டிருந்தார். 
இதனைப்பார்த்துக் கடுப்பான போலீசார், அந்த நபரைச் சகலவித மரியாதையுடன் எழுப்பி, அர்ச்சனை செய்துள்ளனர். அவரை 4 மிதி மிதித்து போலீசார் எழுப்பி உள்ளனர். அந்த நபர் கண் விழித்ததும், போலீசார் பலர் துப்பாக்கி உடன் நிற்பதைப் பார்த்து, அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால், பதறிப்போய் நின்ற அவரை, போலீசார் சகல மரியாதை உடன், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த காட்சிகளைப் பார்த்த அங்குக் கூடி நின்ற மக்களும், ஊடக நண்பர்களும் சிரிப்பது போல் நொந்துகொண்டனர். சிலர் குழப்பம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் எல்லாம் வாய் விட்டே சிரித்து விட்டனர். இந்த செய்தியும், ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்து பலரும் சிரித்து விட்டனர். 

மேலும், போலீசாரையும் அந்நாட்டு மக்களையும் பீதியடையச் செய்த அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால், அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரும் வீடு திரும்பி உள்ளார். அப்போது, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவர்கள் அவரை சிரிப்புடனே பார்த்தனர். பதிலுக்கு, அந்த நபரும் வெட்கப்பட்டுக்கொண்டே வீட்டிற்குள் வந்தார். பாவம், போலீசார் தான் புலம்பித் தவித்தனர்.