ஜெர்மனியில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பால் முதன் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து சற்று ஓய்ந்தநிலையில், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்து யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா இரண்டாம் அலையை உருவாக்கியது.

இந்த இரண்டாம் அலை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பலாம் என நினைத்தபோது கொரோனாவின் அடுத்த உருவமான ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. 

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

germany omicron deathகடந்த மாதம் 24 ஆம் தேதி முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் குறைவான நாட்களிலேயே அதிக நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஒமிக்ரான் வகை வைரஸ் கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தி அறிவித்துள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருவான டெல்டா வகை கொரோனா வைரசை விட குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து, அமெரிக்காவை தொடர்ந்து ஜெர்மனியிலும் ஒமிக்ரான் மாறுபாட்டால் முதன்முறையாக மரணம் ஏற்பட்டுள்ளது.

இதனை ஜெர்மனி நாட்டு அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) உறுதிப்படுத்தியுள்ளது.

ஒமிக்ரான் பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜெர்மனியில் புத்தாண்டு தினத்தன்று கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கார்ல் லாட்டர்பேச் (Karl Lauterbach) தெரிவித்துள்ளார்.

இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்பின் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கார்ல் லாட்டர்பேச் கூறியுள்ளார்.

germany omicron deathமற்ற ஐரோப்பிய நாடுகளை போல ஜெர்மனியில் தற்போது வரை ஒமிக்ரானால் பெரியளவிலான தொற்று பரவல் ஏற்படவில்லை. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்ட்டாட்டங்களால் ஜனவரி முதல் வாரத்தில் ஜெர்மனியில் ஒமிக்ரான் பெரியளவில் பரவ வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதையடுத்து கொரோனாவுக்கு எதிரான சிறந்த நோயெதிர்ப்பு சக்தியைப் தக்கவைக்க மக்களுக்கு நான்காவது தடுப்பூசி டோஸ் தேவைப்படும் என்பதால், விடுமுறை காலத்தில் ஜெர்மனியர்கள் தங்கள் தொடர்புகளை குறைத்துக்கொள்ளவும், அவர்கள் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால், பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கார்ல் லாட்டர்பேச் வலியுறுத்தியுள்ளார்.