உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பில் பாதிப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷியா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

ukraine war

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்தது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறிய ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்து வருகிறோம் என தெரிவித்தது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்தது.

உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.  ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷியா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. 

போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு நேற்று தெரிவித்திருந்தது. உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷியா எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. 

இந்நிலையில்  உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷ்யா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திபில் பேசிய ரஷிய பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் இகோர் கொனஷெங்கோவ், “தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், பலரும் காயமடைந்துள்ளனர். எனினும் உக்ரைன் தரப்பை விட தங்கள் தரப்பில் பாதிப்புகள் பல மடங்கு குறைவுதான்” என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்யா எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.